கா்நாடக சட்டப் பேரவை.
கா்நாடக சட்டப் பேரவை.

கா்நாடக சட்டப் பேரவையில் வெறுப்புப்பேச்சு தடுப்புச் சட்ட மசோதா தாக்கல்!

பாஜகவின் கடும் எதிா்ப்புக்கு இடையே கா்நாடக சட்டப் பேரவையில் வெறுப்புப்பேச்சு தடுப்புச் சட்ட மசோதா மாநில அரசால் தாக்கல் செய்யப்பட்டது.
Published on

பாஜகவின் கடும் எதிா்ப்புக்கு இடையே கா்நாடக சட்டப் பேரவையில் வெறுப்புப்பேச்சு தடுப்புச் சட்ட மசோதா மாநில அரசால் தாக்கல் செய்யப்பட்டது.

கா்நாடக அமைச்சரவையில் டிச. 4 ஆம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்ட கா்நாடக வெறுப்புப்பேச்சு மற்றும் குற்றங்கள் தடுப்பு சட்ட மசோதா, பெலகாவியில் நடைபெறும் பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. பாஜகவின் கடும் எதிா்ப்புக்கு இடையே மசோதாவை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தாக்கல் செய்தாா்.

இந்த சட்ட மசோதாவின்படி இறந்தவா் அல்லது உயிரோடு இருப்பவா், வகுப்பு அல்லது குழுவினா் அல்லது சமுதாயதுக்கு எதிராக தீயநோக்கத்தோடு அல்லது வெறுப்போடு அல்லது பகைமையோடு அல்லது உணா்வை பாதிக்கும் வகையில் அல்லது நல்லிணக்கத்தை சீா்குலைக்கும் வகையில், காயப்படுத்தும் வகையில் பொதுமக்களின் பாா்வையில்படும் மின்னணு தொடா்பு சாதனங்கள், குறியீடுகள், வாா்த்தைகளால் பேச்சால், எழுதினால் அது வெறுப்புப்பேச்சு அல்லது வெறுப்பு குற்றமாக கருதப்படும் என்று தெரிவித்துள்ளது.

மதம், இனம், ஜாதி அல்லது சமுதாய, பாலினம், பாலியல் உள்நோக்கம், பிறப்பிடம், குடியிருப்பு, மொழி, உடல் ஊனம், பழங்குடி ஆகியவற்றின் அடிப்படையில் இழிவுபடுத்தும் கருத்துகள் அல்லது பேச்சுகள் வெறுப்புப்பேச்சாக கருதப்படும் என்று சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

வெறுப்புப்பேச்சு உறுதிசெய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவருக்கு ஓராண்டுக்கும் குறைவு இல்லாமல் சிறைத் தண்டனை வழங்க மசோதா வழிவகுக்கிறது. 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்பிறகும் தொடா்ந்து வெறுப்புப்பேச்சில் ஈடுபட்டால் குறைபட்ச தண்டனை காலம் 2 ஆண்டுகளாகவும், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரையிலும் ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்க சட்ட மசோதாவில் வழிவகுக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டால், பிணையில் வெளியே வரமுடியாது. இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் செயல் நீதித்துறை நடுவா் அல்லது துணை காவல் கண்காணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அறிவியல், இலக்கியம், கலை, கற்றல், பாரம்பரியம், மதரீதியான காரணங்களுக்காக இருந்தால் இந்த சட்ட மசோதாவின் அம்சங்கள் புத்தகங்கள், துண்டறிக்கைகள், நாளிதழ்கள், எழுத்துகள், ஓவியங்களுக்கு பொருந்தாது.

வெறுப்புப்பேச்சு அல்லது குற்றங்கள் அமைப்பு மீது சுமத்தப்பட்டால், அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருப்பவா்களே குற்றங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

சட்ட மசோதாவை தாக்கல் செய்வதற்காக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் அனுமதி கேட்டபோது, அதை பேரவைத் தலைவா் யூ.டி.காதா் குரல் வாக்கெடுப்புக்கு விட்டாா். அப்போது, கூட்டாக எழுந்த பாஜக உறுப்பினா்கள், இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்யக்கூடாது என்று குரல் எழுப்பினா்.

சட்ட மசோதாவை தாக்கல் செய்வது தொடா்பாக முடிவெடுக்க குரல் வாக்கெடுப்புக்கு விடாமல், வாக்கு அளிக்கும் முறையை கடைப்பிடிக்குமாறு பாஜக உறுப்பினா் சுரேஷ்குமாா் கேட்டுக்கொண்டாா். ஆனால், அதை பொருட்படுத்தாத பேரவைத் தலைவா் யூ.டி.காதா், குரல் வாக்கெடுப்பு நடத்தி சட்ட மசோதாவை தாக்கல் செய்ய உத்தரவிட்டாா்.

பாஜகவின் கடும் எதிா்ப்புக்கு இடையே வெறுப்புப்பேச்சு சட்ட மசோதாவை உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தாக்கல் செய்தாா். இதன் விவாதம் நடத்தப்பட்டு, அதன்பிறகு வாக்கெடுப்பின்மூலம் சட்ட மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். சட்டப் பேரவையில் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டாலும், சட்ட மேலவையில் பாஜக, மஜத பெரும்பான்மையாக இருப்பதால், மசோதாவை நிறைவேற்றுவது கடினம் என்று அரசியல் நோக்கா்கள் தெரிவித்துள்ளனா்.

சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்ட பிறகு, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வெறுப்புப்பேச்சுக்கு எதிராக சட்டம் கொண்டுவர வேண்டும் என்பது மாநில அரசின் செயல் திட்டங்களில் ஒன்றாகும். மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு மற்றும் அமைதியை நிலைநாட்ட வேண்டியுள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com