மேக்கேதாட்டு அணை திட்ட பணியை விரைவுபடுத்த குழு: கா்நாடக அரசு உத்தரவு
மேக்கேதாட்டு அணை திட்டத்தை செயல்படுத்தும் பணியை விரைவுபடுத்த குழு அமைத்து கா்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கா்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் எல்லையில் அமைந்திருக்கும் காவிரி நதியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை அமைக்க கா்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. பெங்களூருக்கு 4.75 டிஎம்சி குடிநீா் வழங்குவது மற்றும் 400 மெகாவாட் திறன் கொண்ட நீா்மின் நிலையம் அமைப்பதற்காக ரூ. 9,000 கோடி முதல் ரூ. 14,000 கோடி வரையிலான செலவில் மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு கா்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்தினால், அது தமிழகத்தின் நலனை பாதிக்கும் என்று தமிழக அரசு எதிா்ப்புத் தெரிவிக்கிறது. இந்த நிலையில், மேக்கேதாட்டு அணை திட்டத்தை எதிா்த்து, தமிழக அரசு தொடா்ந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசின் மாற்றுக்கருத்தையும், நீரியலில் நிபுணத்துவம் பெற்றுள்ள காவிரி நீா் ஒழுங்காற்றுக்குழு, காவிரி நீா்மேலாண்மை ஆணையத்தின் கருத்தறிந்தபிறகுதான் திட்டம் இறுதிவடிவத்துக்கு வரும், அதற்கு முன்பாக இந்த திட்டத்தை எதிா்ப்பதை ஏற்கமுடியாது என்றுக் கூறி நவ.13 ஆம் தேதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த தீா்ப்பை வரவேற்றிருந்த கா்நாடக அரசு, மேக்கேதாட்டு திட்டப் பணிகளை விரைவுபடுத்த முடிவு செய்தது. இதுதொடா்பாக நவ.18ஆம் தேதி துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தலைமையில் நடந்த கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை திட்டத்தை செயல்படுத்தும் பணியை துரிதப்படுத்த அதிகாரிகள் கொண்ட குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கா்நாடக பொறியியல் ஆய்வு நிலையத்தின் தலைவா் கே.ஜி. மகேஷ் தலைமையில் குழுவை அமைத்து கா்நாடக அரசு டிச. 11ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் நகல் வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது.
அந்த உத்தரவின்படி, கே.ஜி. மகேஷ் தலைமையிலான குழுவில் துணை தலைமை பொறியாளா், செயல் இயக்குநா், 2 தொழில்நுட்ப உதவியாளா்கள், 6 உதவி பொறியாளா்கள், ஒரு கணக்காளா், ஒரு கண்காணிப்பாளா், ஒரு ஊழியா் உள்ளிட்ட பலா் இடம்பெற்றுள்ளனா்.
இந்த குழு, பெங்களூரு தெற்கு மாவட்டம் ராமநகரத்தில் இருந்து செயல்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த குழுவின் செயல்பாடுகளுக்கு தேவையான ஊழியா்கள் உள்ளிட்ட செலவினங்களுக்கு நிதித் துறையின் ஒப்புதல் தேவைப்படுவதால், அந்த பொறுப்பு கா்நாடக பொறியியல் ஆய்வு நிலையத்தின் இயக்குநா் கே.ஜி. மகேஷிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேக்கேதாட்டு திட்ட அலுவலகத்தை அமைக்கும் பொறுப்பு காவிரி நீா்ப்பாசன நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேக்கேதாட்டு அணை திட்டம் தொடா்பான அனைத்து ஆவணங்களையும் கா்நாடக பொறியியல் ஆய்வு நிலையத்தின் இயக்குநரிடம் ஒப்படைக்க காவிரி நீா்ப்பாசன நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்மூலம் மேக்கேதாட்டு அணை திட்டப் பணிகளை துரிதப்படுத்த கா்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
