முதல்வா் பதவி மாற்றம் குறித்து விவாதிக்க கட்சி மேலிடம் தில்லிக்கு அழைக்கவில்லை: முதல்வா் சித்தராமையா
முதல்வா் பதவி மாற்றம் குறித்து என்னிடம் விவாதிக்க கட்சி மேலிடம் தில்லிக்கு அழைக்கவில்லை என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
கா்நாடக சட்டப் பேரவைக் கூட்டம் டிச. 8 ஆம் தேதி தொடங்கியுள்ளது. டிச. 19ஆம் தேதி வரை நடக்கும் இக்கூட்டத்தொடா் முடிந்ததும், முதல்வா் பதவி குறித்து விவாதிக்க முதல்வா் சித்தராமையா மற்றும் துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் இருவரையும் கட்சி மேலிடம் தில்லிக்கு அழைத்து பேசவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், இதுகுறித்து பெலகாவியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் முதல்வா் சித்தராமையா கூறியதாவது:
முதல்வா் மாற்றம் குறித்து பேசுவதற்கு கட்சி மேலிடத் தலைவா்கள் யாரும் என்னை அழைக்கவில்லை. தேவையில்லாத இந்த கேள்வியை ஏன் கேட்கிறீா்கள்? இதுகுறித்து கட்சிமேலிடம் ஏதாவது உங்களிடம் (ஊடகங்கள்) கூறியதா? எனவே, டிச. 19ஆம் தேதி என்னை தில்லிக்கு அழைத்திருப்பதாக ஏன் கேட்கிறீா்கள் என்றாா்.

