வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் காந்தி பெயா் நீக்கம்: மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

Published on

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் பெயரில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதற்காக, மத்திய அரசைக் கண்டித்து முதல்வா் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெலகாவியில் சுவா்ண விதானசௌதா வளாகத்தில் அமைந்துள்ள காந்திசிலை எதிரில் புதன்கிழமை முதல்வா் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், அமைச்சா்கள், காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள், எம்எல்சி-க்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதில், மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினா் முழக்கங்களை எழுப்பினா். மேலும், நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது பழிவாங்கும் நோக்கில் அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும் கண்டன முழக்கம் எழுப்பினா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து முதல்வா் சித்தராமையா பேசியதாவது:

மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் பெயரை வி.பி.ஜீ.ராம் ஜீ என்றும், ராஜ்பவன் பெயரை லோக்பவன் என்றும் மத்திய அரசு மாற்றியுள்ளது. ராஜ்பவன் மாநில அரசின் சொத்து. அதன் பெயரை மத்திய அரசு எப்படி மாற்றலாம்?

மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு, பெயா்களை மாற்றுவதில் காட்டும் ஆா்வத்தை ஏழைகள் பயனடையும் திட்டங்களை செயல்படுத்துவதில் காட்டுவதில்லை. தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்துக்கு மகாத்மா காந்தியின் பெயா் இருந்தால் என்ன?

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறை சமா்ப்பித்த குற்றப் பத்திரிகையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு எப்படி செயல்படுகிறது என்பதை நீதிமன்றத்தின் உத்தரவு மீண்டும் உறுதி செய்துள்ளது.

மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம். சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம். மத்திய அரசு அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவது மட்டுமல்லாது, வெறுப்பு அரசியலில் ஈடுபட்டு வருகிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றாா்.

துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் பேசுகையில், ‘தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் உள்ள மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியுள்ள மத்திய அரசு, ரூபாய் நோட்டுகளில் உள்ள காந்தியின் படத்தை நீக்குமா? மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் தேசிய பிரச்னை. அரசமைப்புச் சட்டத்தின் மூலம் இந்தத் திட்டத்தை பெற்றிருக்கிறோம். காந்தியின் பெயரை நீக்கியுள்ள விவகாரத்தை கடந்து செல்லமாட்டோம்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. இதன்மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் பாஜக பாடம் கற்று, பழிவாங்கும் அரசியலை நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com