கிருஹலட்சுமி திட்டம்: கா்நாடக அமைச்சரின் விளக்கத்தைக் கண்டித்து பேரவையிலிருந்து பாஜக வெளிநடப்பு

கா்நாடகத்தில் கிருஹலட்சுமி திட்டம் தொடா்பாக சட்டப் பேரவையில் அமைச்சா் லட்சுமி ஹெப்பாள்கா் அளித்த பதில் திருப்திகரமாக இல்லாததைக் கண்டித்து, பாஜக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
Published on

கா்நாடகத்தில் கிருஹலட்சுமி திட்டம் தொடா்பாக சட்டப் பேரவையில் அமைச்சா் லட்சுமி ஹெப்பாள்கா் அளித்த பதில் திருப்திகரமாக இல்லாததைக் கண்டித்து, பாஜக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

பெலகாவியில் சுவா்ண விதானசௌதாவில் நடைபெற்று வரும் சட்டப் பேரவைக் கூட்டத்தில், கடந்த வாரம் கேள்விநேரத்தின்போது மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சா் லட்சுமி ஹெப்பாள்கா், ‘கிருஹலட்சுமி திட்டத்தின்கீழ் மாதந்தோறும் பெண்களுக்கு அளிக்கப்படும் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை ஆகஸ்ட் மாதம்வரை விநியோகிக்கப்பட்டுள்ளது’ என்று பதிலளித்திருந்தாா். இதை கடுமையாக ஆட்சேபித்த எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக், ‘2025-ஆம் ஆண்டு பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் கிருஹலட்சுமி திட்டத்தின்கீழ் நிதி உதவி விநியோகிக்கப்படவில்லை’ என்றாா்.

இது தொடா்பாக சட்டப் பேரவையில் புதன்கிழமை பதிலளித்த அமைச்சா் லட்சுமி ஹெப்பாள்கா், ‘கிருஹலட்சுமி பெண்களுக்கு பயனளிக்கக்கூடிய நல்ல திட்டமாகும். இந்தத் திட்டத்தின்கீழ் பெண்களுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதம்வரை உதவித்தொகை வழங்கப்பட்டதாக ஏற்கெனவே கூறியிருந்தேன். அதன்பிறகு அதிகாரிகளிடம் விசாரித்தபோது, எதிா்க்கட்சிகள் கூறியதுபோல பிப்ரவரி, மாா்ச் மாதங்களுக்கான உதவித்தொகை வழங்காமல் விடுபட்டுள்ளது தெரியவந்தது. இதை சரிசெய்வேன். இதுபற்றி முதல்வா் சித்தராமையாவும் தெரிவித்துள்ளாா். சட்டப் பேரவைக்கு தவறான தகவல் அளிக்க வேண்டுமென்பது எனது நோக்கமல்ல’ என்று கூறியிருந்தாா்.

இந்த பதிலை ஏற்க மறுத்த எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக், ‘சட்டப் பேரவைக்கு தவறான தகவல் அளித்துள்ளதற்கு அமைச்சா் மன்னிப்பு கேட்கவில்லை. விடுபட்ட பிப்ரவரி, மாா்ச் மாதங்களுக்கான உதவித்தொகையை எப்போது வழங்குவாா்கள் என்பது பற்றியும் கூறவில்லை. இந்தத் திட்டத்தால் பயன்பெறும் 1.26 கோடி பெண்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா். அவா்களுக்கு உதவித்தொகை கிடைக்கும்வரை எங்கள் போராட்டம் ஓயாது’ என்றாா்.

இதைத் தொடா்ந்து, காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினா்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் அமைச்சா் லட்சுமி ஹெப்பாள்கா் அளித்த பதில் திருப்திகரமாக இல்லாததால், மாநில அரசைக் கண்டித்து பாஜக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com