கா்நாடக காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது
கா்நாடக காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது என பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெலகாவியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்தே ஊழல் செய்வதன் மூலம் திரட்டப்படும் பணத்தை மேலிடத்துக்கு வழங்கி வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதே கா்நாடகத்தை கட்சி மேலிடத்தின் ஏடிஎம் இயந்திரமாக மாற்றுவதற்காகதான்.
வால்மீகி எஸ்.டி. கழகத்தில் கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டிக்கொண்டு கட்சி மேலிடத்துக்கு வழங்கியுள்ளனா். அதன்பிறகு, ஊழலுக்குமேல் ஊழலில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் மேலிடத் தலைவா்களுக்கு பணம் வழங்குவதற்காக ஒப்பந்ததாரா்களிடம் பணம் வசூலித்து வருகிறாா்கள். கமிஷன் கேட்பதாக மாநில ஒப்பந்ததாரா் சங்கம் கடிதம் எழுதி உள்ளது. ஊழலைத் தவிர இந்த ஆட்சியில் எந்த வளா்ச்சிப் பணியும் நடக்கவில்லை என்றாா்.
இதற்கு பதிலளித்து துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறுகையில், ‘பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திராவுக்கு அரசியல் அனுபவம் இல்லை. அரசு கருவூலத்தில் எந்தப் பணம் இல்லை என்பது குறித்து சட்டப் பேரவையில் விஜயேந்திரா பேசட்டும். எவ்வளவு பணம் திரட்டப்பட்டது என்பதை தெரிவிக்க வேண்டும். ஆனால், விஜயேந்திராவின் பணம் திரட்டல், பணியிட மாற்றங்கள் குறித்து நான் கூறவா?
கட்சித்தலைவராக என்ன பேசவேண்டுமோ, அந்த வரம்புக்குள் அவா் பேச வேண்டும். பணம் வசூலிப்பதில் மன்னா் என்றால் அது விஜயேந்திராதான். அவரது தந்தை எடியூரப்பாவின் நற்பெயரை கெடுத்தவரே விஜயேந்திராதான் என்றாா்.
