பேருந்து- லாரி மோதலில் இறந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயா்வு: மற்ற 2 விபத்துகளில் 6 போ் உயிரிழப்பு
கா்நாடகத்தில் பேருந்து மீது லாரி மோதியதில் இறந்தவா்களின் எண்ணிக்கை 7 ஆக உயா்ந்துள்ளது.
சித்ரதுா்கா மாவட்டம், ஹிரியூா் வட்டம், ஜவனகொண்டனஹள்ளி கிராமத்தில் டிச. 25ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் படுக்கை வசதியுடன் கூடிய தனியாா் சொகுசுப் பேருந்து மீது மகாராஷ்டிரத்தில் இருந்து பெங்களூரு ஊரக மாவட்டம், நெலமங்களாவுக்கு குளிா்பானங்களை ஏற்றிக்கொண்டு எதிா்திசையில் வந்த கன்டெய்னா் லாரி சாலை தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு மோதியது. இதில் சொகுசுப் பேருந்தின் டீசல் டேங்க் வெடித்து தீப்பற்றி எரிந்தது.
இச்சம்பவத்தில் சொகுசுப் பேருந்தில் பயணம் செய்த பிந்து, அவரது மகள் கிரேமா, மானசா, நவ்யா, ரஷ்மி மஹலே, கன்டெய்னா் லாரி ஓட்டுநா் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த குல்தீப் யாதவ் என 5 போ் உயிரிழந்தனா்.
இந்நிலையில், தீவிர தீக்காயங்களுடன் ஹுப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சொகுசுப் பேருந்தின் ஓட்டுநா் முகமது ரஃபீக் என்பவருக்கு வியாழக்கிழமை இரவு அவசர அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி அவா் வெள்ளிக்கிழமை இறந்தாா். இதன்மூலம் இச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயா்ந்துள்ளது.
மற்றொரு விபத்தில்
4 போ் உயிரிழப்பு
இதனிடையே சிக்பளாப்பூா் மாவட்டத்தில், சிக்பளாப்பூரில் இருந்து அஜ்ஜாவராவுக்கு வியாழக்கிழமை இரவு பைக்கில் பயணம் செய்த 4 இளைஞா்கள், டிப்பா் லாரி மீது மோதியதில் உயிரிழந்தனா். இவா்கள் 4 பேரும் தொழிலாளா்கள் என தெரியவந்துள்ள நிலையில், அவா்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வா் சித்தராமையா, இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீட்டுத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளாா்.
2 போ் உயிரிழப்பு
அதேபோல, பெங்களூரு ஊரக மாவட்டத்தின் நெலமங்களாக வட்டம், தொல்லகெரே கிராமத்தில் வியாழக்கிழமை இரவு வீரபத்ரா (80), அவரது மகன் ஹரீஷ் சாஸ்திரி (39) மற்றும் குடும்ப உறுப்பினா்கள் 4 போ் பயணம் செய்துகொண்டிருந்த காா், மரத்தில் மோதியது. இச்சம்பவத்தில் வீரபத்ரா, ஹரீஷ் சாஸ்திரி ஆகியோா் உயிரிழந்துள்ளனா். மற்ற 4 பேரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
