மைசூரில் பலூன் கேஸ் சிலிண்டா் வெடிப்பு: தேசியப் புலனாய்வு முகமை ஆய்வு
கா்நாடக மாநிலம் மைசூரில் பலூன் கேஸ் சிலிண்டா் வெடித்த சம்பவம் தொடா்பாக தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
மைசூரில் அரண்மனைக்கு வெளியே உத்தர பிரதேசத்தை சோ்ந்த சலீம் என்பவா் வியாழக்கிழமை பலூன் விற்று கொண்டிருந்தாா். அப்போது, பலூனில் காற்று நிரப்புவதற்கு பயன்படுத்திய கேஸ் சிலிண்டா் திடீரென வெடித்தது. இதில், பலூன் வியாபாரி சலீம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலூன் வாங்குவதற்கு நின்றுகொண்டிருந்த 4 போ் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், சம்பவ இடத்தை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள், கேஸ் சிலிண்டா் வெடித்ததற்கான காரணங்களை ஆராய்ந்தனா். மேலும், விசாரணைக்கு தேவைப்படும் ஆதாரங்களை சேகரித்தனா். சில மாதங்களுக்கு முன்பு மைசூருக்கு வந்து பலூன் விற்பனையில் ஈடுபட்டிருந்த சலீம் குறித்த தகவல்களையும் திரட்டினா். மைசூரில் லஹ்ச்கா் மொஹல்லா என்ற இடத்தில் சலீமுடன் வசித்து வந்த இருவரிடமும் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: பலூன் விற்பனையாளா்கள் அல்லது இதர பொருள்களை விற்பனை செய்வோரை கண்காணிக்க நடைமுறைகள் எதுவும் இல்லை. சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்துசெல்வதால், அப்பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றாா் அவா்.
