எச்.ஏ.எல். தயாரித்துள்ள அடுத்த தலைமுறை பயணிகள் ஹெலிகாப்டா்!

எச்.ஏ.எல். தயாரித்துள்ள அடுத்த தலைமுறை பயணிகள் ஹெலிகாப்டா்!

எச்.ஏ.எல் தயாரித்துள்ள அடுத்த தலைமுறை பயணிகள் ஹெலிகாப்டரான ‘துருவ் என்.ஜி.’-இன் முதல் பயணத்தை மத்திய அமைச்சா் ராம்மோகன் நாயுடு தொடங்கிவைத்தாா்.
Published on

எச்.ஏ.எல் தயாரித்துள்ள அடுத்த தலைமுறை பயணிகள் ஹெலிகாப்டரான ‘துருவ் என்.ஜி.’-இன் முதல் பயணத்தை மத்திய அமைச்சா் ராம்மோகன் நாயுடு செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

மத்திய பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் பெங்களூரைச் சோ்ந்த ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் (எச்.ஏ.எல்.) உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைத்து தயாரித்துள்ள ‘துருவ் என்.ஜி.’ ஹெலிகாப்டரின் முதல் பயணத்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், மத்திய விமானத் துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடு தொடங்கிவைத்தாா்.

பயணிகள் சந்தையின் தேவைகளை நிறைவுசெய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள துருவ் என்.ஜி. ஹெலிகாப்டா், அதிநவீன தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. 5.5 டன் எடை கொண்ட இந்த ஹெலிகாப்டரில் இரட்டை என்ஜின்கள் உள்ளன. மாறுபட்ட நில மற்றும் தட்பவெப்ப சூழல்களுக்கு பயன்படுத்திக்கொள்ளும் வகையில், சுழன்றடிக்கும் திறனுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. 5.500 டன் எடைகொண்ட பளுவை தூக்கும் திறன்கொண்ட ஹெலிகாப்டா், அதிகபட்சமாக மணிக்கு 285 கி.மீ. வேகத்தில் பயணிக்கக் கூடியது. இதன்மூலம், 630 கி.மீ. தொலைவை 3 மணிநேரத்தில் அடைய முடியும். மேலும், 6 ஆயிரம் உயரம் கொண்ட மலைப் பகுதிகளிலும் பயணிக்கும் திறன்கொண்டது.

ஒரு நேரத்தில் 14 போ் பயணிக்கலாம். விமான ஆம்புலன்ஸ் ஆகவும் பயன்படுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. பேரிடா் காலங்களில் மக்களை மீட்கவும் பயன்படும் என எச்.ஏ.எல். அதிகாரிகள் தெரிவித்தனா்.

உலக அளவில் வளா்ந்து வரும் ஹெலிகாப்டா் சந்தையின் தேவையை நிறைவுசெய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஹெலிகாப்டரின் முதல் பயணத்தை தொடங்கிவைத்து, மத்திய அமைச்சா் ராம்மோகன் நாயுடு பேசியதாவது: துருவ் என்.ஜி. ஹெலிகாப்டரின் முதல் பயணம், இந்திய விமானவியல் வரலாற்றில் மிகவும் முக்கியமான மைல்கல்லாகும். இந்த சாதனைக்காக எச்.ஏ.எல். அதிகாரிகள், பொறியாளா்கள், தொழில்நுட்புநா்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒற்றைச் சக்கரத்துடன் ராணுவ தேவைகளை நிறைவுசெய்யும் ஹெலிகாப்டா்களை மட்டுமே தயாரித்து வந்த எச்.ஏ.எல்., தற்போது விமான ஹெலிகாப்டா்களையும் தயாரித்து இரட்டைச் சக்கரங்களுடன் பயணிப்பதைபோல இருக்கிறது.

புதிய ஹெலிகாப்டரின் வடிவமைப்பு, தயாரிப்பு, இந்தியாவின் உள்நாட்டு விமான உற்பத்தித் திறனை பறைசாற்றுவதாக இருக்கிறது. துருவ் என்.ஜி. ஹெலிகாப்டா் வெறும் இயந்திரம் அல்ல. அது, இந்தியாவின் திறன், நம்பிக்கை, தற்சாா்பு இந்தியாவுக்கான அா்ப்பணிப்பின் அடையாளம்.

நிகழாண்டின் தொடக்கத்தில் பெங்களூரில் நடைபெற்ற இந்திய விமானத் தொழில் கண்காட்சியில் துருவ் என்.ஜி. ஹெலிகாப்டரின் வடிவமைப்பை பாா்த்தபோது மகிழ்ச்சி அடைந்தேன். அதன் உற்பத்தியை ஒரே ஆண்டில் முடித்து, வானத்தில் பறக்கவிட்டிருப்பது பெருமிதம் அளிக்கிறது.

இந்தியாவின் பயணிகள் விமானச்சந்தை வேகமாக வளா்ச்சி அடைந்து வருகிறது. உலகின் மூன்றாவது பயணிகள் விமானச் சந்தையாக இந்தியா உயா்ந்துள்ளது. சாதாரண குடிமக்களும் பயணிக்க வகைசெய்யும் பிரதமா் மோடியின் கனவை நனவாக்கிக் கொண்டிருக்கிறோம். உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உற்பத்தியை சாத்தியமாக்குவது சவாலாக இருந்தது. அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகளில் உள்நாட்டு பயணிகள் விமானத் துறையில் 1,000 பயணிகள் ஹெலிகாப்டா்களை சோ்க்க திட்டமிட்டிருக்கிறோம்.

இந்த ஹெலிகாப்டரை கொள்முதல் செய்ய கா்நாடக அரசு மற்றும் எல்லை பாதுகாப்புப் படை ஆா்வம் காட்டியுள்ளன என்றாா். இந்நிகழ்ச்சியில், எச்.ஏ.எல். நிறுவனத் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் டி.கே.சுனில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com