மத்திய - மாநில அரசுகளின் ஜாதிவாரி கணக்கெடுப்புகளுக்கு இடையே வேறுபாடு உள்ளது
தாவணகெரே: மத்திய - மாநில அரசுகளின் ஜாதிவாரி கணக்கெடுப்புகளுக்கு இடையே வேறுபாடு உள்ளது என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
இதுகுறித்து தாவணகெரேயில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு 2027-ஆம் ஆண்டு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த ஜாதிவாரி கணக்கெடுப்பின்போது சமூக, பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படுமா என்று கூறப்படவில்லை. சமூக, கல்வி கணக்கெடுப்பின்போது ஜாதியும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மாநில அரசின் ஆட்சேபணை இல்லை. ஆனால், மாநில அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம் வேறு. மத்திய அரசு வெறும் ஜாதிவாரி கணக்கெடுப்பை மட்டும் நடத்துகிறது. ஆனால், விரிவான சமூக, கல்வி கணக்கெடுப்பு மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு எடுக்க இருக்கிறது.
மத்திய - மாநில அரசுகளின் ஜாதிவாரி கணக்கெடுப்புகளுக்கு இடையே உள்ள வேறுபாடு மிகவும் முக்கியமானதாகும். மாநில அரசு எடுக்கவிருக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்பில், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் விளிம்புநிலை சமுதாயங்கள் நலத் திட்டங்களால் அடைந்த பயன்கள் தெரியவரும். சமூகநீதியை நிலைநாட்டுவதற்காக இந்தக் கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது. மக்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலையை அறிந்துகொள்ள முற்படுகிறோம். இதை தெரிந்துகொள்ளாமல், நலத் திட்டங்களை செயல்படுத்துவது அா்த்தமற்ாகிவிடும்.
முந்தைய ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு லிங்காயத்து, ஒக்கலிகா் சமுதாயங்கள் மட்டுமல்லாது, பிற்படுத்தப்பட்டோா் சமுதாயமும் எதிா்ப்பு தெரிவித்திருந்தது. இதைவிட முக்கியமானது, முந்தைய ஜாதிவாரி கணக்கெடுப்பு 10 ஆண்டுகள் பழைமையானது.
கா்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோா் ஆணையச் சட்டத்தின் 11-ஆம் பிரிவின்படி, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இந்த சட்ட காரணத்தின் அடிப்படையில்தான் புதிதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்தோம். ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்கும்படி பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றாா்.

