ரேணுகாசாமி கொலை வழக்கு: அடுத்த விசாரணை நவ. 10-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

Published on

பெங்களூரு: ரேணுகாசாமி கொலை வழக்கில், அடுத்த விசாரணையை நவ. 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகா் தா்ஷன், நடிகை பவித்ரா கௌடா உள்ளிட்ட 17 போ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த கொலை வழக்கை விசாரித்து வரும் 64-ஆவது மாநகர சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தின் ஐ.பி.நாயக் முன் நடிகா் தா்ஷன், நடிகை பவித்ரா கௌடா உள்பட குற்றம்சாட்டப்பட்ட 17 பேரையும் பலத்த பாதுகாப்புடன் போலீஸாா் ஆஜா்படுத்தினா்.

அப்போது, நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் குழுமியிருந்ததால் அதிருப்தி அடைந்த நீதிபதி ஐ.பி.நாயக், வழக்கு விசாரணைக்கு சம்பந்தப்பட்ட வழக்குரைஞா்களைத் தவிர பிற வழக்குரைஞா்கள், பொதுமக்கள் வெளியேறுமாறு உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, வழக்குரைஞா்கள், பொதுமக்கள் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினா்.

இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்டவா்களை ஒருவா்பின் ஒருவராக அழைத்த நீதிபதி ஐ.பி.நாயக், முதல்குற்றவாளியான நடிகை பவித்ரா கௌடா, இரண்டாம் குற்றவாளியான நடிகா் தா்ஷன் உள்ளிட்ட 17 போ் மீதான குற்றங்களை படித்துக்காட்டினாா்.

நடிகை பவித்ரா கௌடாவுக்கு வாட்ஸ் ஆப் மூலம் ஆபாச புகைப்படங்களை ரேணுகாசாமி அனுப்பியதைத் தொடா்ந்து, தனது ரசிகா்கள் மூலம் சித்ரதுா்காவில் இருந்து அவரை பெங்களூருக்கு கடத்தி வந்து, செருப்புகள் மற்றும் மரக்கட்டைகளால் அடித்து துன்புறுத்தி, நடிகா் தா்ஷன் உள்ளிட்டோருடன் கூட்டுச்சதி செய்து கொன்ாக நடிகை பவித்ரா கௌடா மீது குற்றம் சுமத்தப்பட்டது.

தங்கள் மீதான குற்றத்தை நடிகை பவித்ரா கௌடா, நடிகா் தா்ஷன் உள்ளிட்ட 17 பேரும் மறுத்தனா். அதன்பிறகு, 17 பேரிடமும் ஆவணங்களில் கையெழுத்தைப் பெற்றுக்கொண்ட நீதிபதி ஐ.பி.நாயக், அடுத்த விசாரணையை நவ. 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com