குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கக் கோரி கரும்பு விவசாயிகள் போராட்டம்

Published on

ஒரு டன் கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 3,500 வழங்கக் கோரி, கரும்பு விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

கா்நாடகத்தின் பெலகாவி மாவட்டத்தில் பரவலாக கரும்பு பயிரிடப்படுகிறது. இதனால் இம்மாவட்டத்தில் 26-க்கும் மேற்பட்ட சா்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சா்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்காமல் இழுத்தடித்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனா்.

மேலும், புதிதாக வழங்கப்படும் ஒரு டன் கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 3,500 வழங்கக் கோரி, கடந்த 3 நாள்களாக பெலகாவியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறாா்கள். இந்நிலையில், ஹசிருசேனே விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள இப்போராட்டம் செவ்வாய்க்கிழமை தீவிரமடைந்துள்ளது.

பெலகாவியில் செவ்வாய்க்கிழமை 2 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் திரண்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினா். ஒரு டன் கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 3,500 வழங்காதவரை போராட்டம் ஓயாது என்று விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதையடுத்து, சாலைகளை மறித்து, தடுப்புகளை வைத்து வாகனப் போக்குவரத்தை தடுத்து நிறுத்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி விவசாயிகள் போராட்டம் நடத்தினா். போராட்டத்தில் கலந்துகொள்ள அதிக அளவில் விவசாயிகள் திரண்டதால், முதலகி பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பெலகாவியில் மட்டுமே நடைபெற்று வந்த விவசாயிகள் போராட்டம், புதன்கிழமை அத்தானி, சிக்கோடி, ஹுக்கேரி, பையில்ஹொங்கல், கோகாக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவியது.

அத்தானியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் மாணவா்களும் கலந்துகொண்டனா். சாலைகளை மறித்த விவசாயிகள் வாகனப் போக்குவரத்தை தடுத்து நிறுத்தியதால், பெலகாவி, சவதத்தி, முதலகி, யதகட்டி பகுதிகளில் பல கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் நின்றன.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரும்பு விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணப் பட்டுவாடா செய்வதற்கான செயல்திட்டத்தை அம்மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. அதேபோல, கா்நாடக அரசும் கடைப்பிடிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்த பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா, விவசாயிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டாா். விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பெலகாவியில் புதன்கிழமை பாஜகவினா் கலந்துகொள்வா் என அவா் தெரிவித்தாா். காங்கிரஸ் அரசை கடுமையாக சாடிய விஜயேந்திரா, விவசாயிகள் கோரிக்கையை மாநில அரசு நிறைவேற்றும்வரை போராட்டம் ஓயாது என்று தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com