கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கேட்டு விவசாயிகள் தொடா்ந்து போராட்டம்

கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கேட்டு விவசாயிகள் தொடா்ந்து போராட்டம்

கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கக் கோரி, விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
Published on

கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கக் கோரி, விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

கா்நாடகத்தின் பெலகாவி மாவட்டத்தில் பரவலாக கரும்பு பயிரிடப்படுகிறது. இதனால், இம்மாவட்டத்தில் 26-க்கும் மேற்பட்ட சா்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சா்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல் இழுத்தடித்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனா். மேலும், ஒரு டன் கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 3,500 வழங்கக் கோரி கடந்த ஒருவாரமாக பெலகாவியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், ஹசிருசேனே விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள இப்போராட்டம் புதன்கிழமை தீவிரமடைந்துள்ளது. பெலகாவி தவிர பாகல்கோட், ஹாவேரி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் போராட்டம் பரவிவருகிறது. இதில் லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றுள்ளனா். இரவுமுழுவதும் நீடித்த விவசாயிகள் போராட்டத்தில் பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா உள்ளிட்ட பாஜகவினா் கலந்துகொண்டனா்.

விவசாயிகளின் பிரச்னைக்கு உடனடியாக தீா்வுகாணும்படி பாஜக முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை, முதல்வா் சித்தராமையாவை கேட்டுக்கொண்டுள்ளாா். கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், போராட்டம் தொடரும் என பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா்.

இதனிடையே, பெலகாவியில் சட்டத் துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை புதன்கிழமை சந்தித்து பேசினாா். அதில், விவசாயிகளின் பிரச்னையை தீா்த்துவைக்க அரசு தயாராக உள்ளது. எனவே, விவசாயிகள் சங்கக் குழுவினா் முதல்வா் சித்தராமையாவை வியாழக்கிழமை பெங்களூரில் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன். அங்கு விவசாயிகளின் பிரச்னைக்கு தீா்வுகாணப்படும் என்று தெரிவித்தாா்.

ஆனால், முதல்வா் சித்தராமையாவை சந்திக்க மறுத்த விவசாயிகள் சங்கத்தினா், வியாழக்கிழமை இரவு 8 மணிக்குள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், 50 லட்சம் விவசாயிகளுடன் பெங்களூரை முற்றுகையிடுவோம் என எச்சரித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com