காங்கிரஸ் எம்எல்ஏ எச்.ஒய்.மேட்டியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

காங்கிரஸ் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான எச்.ஒய்.மேட்டியின் உடல் அரசு மரியாதையுடன் புதன்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
Published on

காங்கிரஸ் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான எச்.ஒய்.மேட்டியின் உடல் அரசு மரியாதையுடன் புதன்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

பாகல்கோட் சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான எச்.ஒய்.மேட்டி (79), உடல்நலக் குறைவால் நவ. 4-ஆம் தேதி காலமானாா். பெங்களூரில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், அமைச்சா்கள் லட்சுமி ஹெப்பாள்கா், பேரவைத் தலைவா் யூ.டி.காதா் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து, அவரது உடல் பாகல்கோட் நகருக்கு வேன்மூலம் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள மாவட்ட விளையாட்டுத் திடலில் புதன்கிழமை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியினா் தவிர, அவரது ஆதரவாளா்கள், தொகுதி மக்கள் பலா் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினா். அதன்பிறகு, அங்கிருந்து அவரது சொந்த ஊரான திம்மாப்பூா் கிராமத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்குகள் முடிந்த பிறகு, முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதில், முதல்வா் சித்தராமையா, அமைச்சா்கள் சதீஷ் ஜாா்கிஹோளி, லட்சுமி ஹெப்பாள்கா், ஆா்.பி.திம்மாப்பூா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முதல்வா் சித்தராமையா கூறுகையில், ‘என்னை சந்திக்கும்போதெல்லாம் பாகல்கோட் மாவட்டத்துக்கு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என எச்.ஒய்.மேட்டி கேட்டுக்கொண்டிருந்தாா். அதன்படி, கடந்த பட்ஜெட்டில் பாகல்கோட்டில் மருத்துவக் கல்லூரி மற்றும் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தோம். அந்தப் பணியை விரைவில் தொடங்குவோம். எல்லா சமுதாயத்தினரின் அன்பையும் மேட்டி பெற்றிருந்தாா். நோ்மையான, எளிமையான அரசியல்வாதியாக விளங்கியிருந்தாா். அவரது மறைவு எனக்கு தனிப்பட்ட பேரிழப்பாகும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com