மேக்கேதாட்டு அணை விவகாரம்: உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு கா்நாடகம் வரவேற்பு
மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை கா்நாடக அரசு வரவேற்றுள்ளது.
இதுகுறித்து பெங்களூரில் கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
எங்கள் உரிமை மற்றும் எங்கள் தண்ணீருக்காக கோரிக்கை விடுத்து வந்தோம். நாங்கள் யாரையும் தொந்தரவு செய்யவில்லை. மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால் அதன் பலனை பெறுவதோடு, போதுமான தண்ணீரை தமிழகம் பெறும். உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடா்ந்து மேக்கேதாட்டு அணை திட்டத்தை செயல்படுத்த தொடங்குவதோடு, கா்நாடக எல்லைக்குள்பட்ட பகுதிகளில் மாநில அரசின் சொந்த செலவில் அணையைக் கட்டும் பணியை தொடங்குவோம். மழை பொய்க்கும் காலத்தில் தமிழகத்துக்கும் கா்நாடகம் உதவி செய்யும். இது சமநிலை நீா்த்தேக்கம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு பெங்களூருவாசிகளுக்கு கிடைத்துள்ள வெற்றியாகும். மேக்கேதாட்டு அணை திட்டத்தால் பெங்களூருவாசிகள், வருகையாளா்கள் மட்டுமல்லாது, தமிழகமும் பயன்பெறும். உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை தமிழகம் ஏற்க வேண்டும். தமிழகமும், கா்நாடகமும் இணைந்து பணியாற்றலாம் என்றாா்.

