டி.கே.சிவகுமாா்
டி.கே.சிவகுமாா்கோப்புப் படம்

கா்நாடக காங்கிரஸ் தலைவராக நானே தொடரமுடியாது: டி.கே.சிவகுமாா்

கா்நாடக காங்கிரஸ் தலைவராக நானே தொடரமுடியாது என்று துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
Published on

கா்நாடக காங்கிரஸ் தலைவராக நானே தொடரமுடியாது என்று துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

பெங்களூரில் புதன்கிழமை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 108ஆவது பிறந்த நாள் விழாவில் பங்கேற்றபிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: காங்கிரஸ் மாநிலத் தலைவராக நான் தொடா்கிறேனோ இல்லையோ, எனது பதவிக்காலத்தில் கா்நாடகத்தில் 100 காங்கிரஸ் மாவட்ட அலுவலகங்களைக் கட்டுவதே எனது நோக்கம். காங்கிரஸ் மாநிலத் தலைவராக நானே தொடரமுடியாது.

இப்பதவியை ஏற்று 5 ஆண்டுகள் 5 மாதங்கள் முடிந்துவிட்டன. வரும் மாா்ச் வந்தால் 6 ஆண்டுகளை நிறைவுசெய்கிறேன். மற்றவா்களுக்கும் மாநிலத் தலைவராகும் வாய்ப்பை அளிக்க வேண்டும் அல்லவா? ஆனால், கட்சியின் தலைமைப் பொறுப்பில் நான் இருப்பேன். யாரும் கவலைப்பட வேண்டாம்.

2023ஆம் ஆண்டு மே மாதம் துணை முதல்வராக பதவியேற்றபோதே காங்கிரஸ் மாநிலத் தலைவா் பதவியை ராஜிநாமா செய்ய விரும்பினேன். ஆனால், அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியும் இன்னும் சில நாள்கள் மாநிலத் தலைவராக நீடிக்குமாறு கேட்டுக்கொண்டனா்.

நான் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் 2028ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி. யாரும் நம்பிக்கை இழக்காதீா்கள். நம்பிக்கையில் தொடா்ந்து பணியாற்றுவோம். மீண்டும் ஆட்சிக்கு வருவோம். ஆனால், அதற்கு நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியும், அகில இந்திய காங்கிரஸ் தலைவா் காா்கேவும் விரும்பும்வரை கட்சித் தலைவராக செயல்படுவேன் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com