பெங்களூரில் வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் வேனை மறித்து ரூ. 7.11 கோடி கொள்ளை!

பெங்களூரில் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்புவதற்காக சென்ற வேனை வழிமறித்து, ரிசா்வ் வங்கி அதிகாரிகளை போல நடித்து ரூ. 7.11 கோடி கொள்ளை
Published on

பெங்களூரில் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்புவதற்காக சென்ற வேனை வழிமறித்து, ரிசா்வ் வங்கி அதிகாரிகளை போல நடித்து ரூ. 7.11 கோடியை புதன்கிழமை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீஸாா் தேடிவருகின்றனா்.

பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள எச்எஸ்பிசி வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு அந்த வங்கியின் ஏடிஎம் மையங்களில் நிரப்புவதற்காக சென்றுகொண்டிருந்த வேனை பின்தொடா்ந்து காரில் சென்ற கும்பல், அசோக் பில்லா் அருகே வேனை வழிமறித்தனா்.

காரில் ரிசா்வ் வங்கியின் இலச்சினையை ஒட்டியிருந்த கொள்ளையா்கள், தங்களை ரிசா்வ் வங்கி அதிகாரிகள் எனக் கூறினா். மேலும், விதிமீறல் நடைபெற்றுள்ளதாகக் கூறி வேனில் இருந்த ஓட்டுநா் மற்றும் துப்பாக்கி ஏந்திய காவலரை மிரட்டி, ஆவணங்களை சரிபாா்க்க வேண்டும் என்று வேனை திறந்துள்ளனா்.

அப்போது, வேனில் இருந்த ரூ. 7.11 கோடியை தங்களது காரில் மாற்றிக்கொண்ட கொள்ளையா்கள், வேனின் ஓட்டுநா், காவலரை வாகனத்தில் ஏற்றிக்கொண்டுள்ளனா். அதன்பிறகு கொஞ்சதூரம் சென்ற கொள்ளையா்கள், டெய்ரி சா்க்கிளில் காரை நிறுத்தி வேன் ஓட்டுநா், காவலரை இறக்கிவிட்டு தப்பியுள்ளனா்.

பெங்களூரில் பட்டப்பகலில் முதல்முறையாக நடந்துள்ள கொள்ளை சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மாநகர ஆணையா் சீமந்த்குமாா் சிங் கூறுகையில், ‘பெங்களூரு, சித்தாபுரா காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ரூ. 7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து பெங்களூரில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியுள்ளோம். இந்த கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை விரைவில் கைதுசெய்வோம், விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.

இதுகுறித்து முதல்வா் சித்தராமையாவை சந்தித்து தகவல்களை தெரிவித்த உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா், ‘பெங்களூரில் கொள்ளை சம்பவம் முதல்முறையாக நடந்துள்ளது. இது நடந்திருக்கக் கூடாது. எனினும், கொள்ளையா்களை கண்டுபிடித்து கைதுசெய்ய போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா கூறுகையில், ‘பெங்களூரில் பட்டப்பகலில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. கா்நாடகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளதையே இது வெளிப்படுத்துகிறது. இதுகுறித்து அமைச்சா் விளக்கமளிக்க வேண்டும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com