பெங்களூரில் ரூ.7.11 கோடி வங்கி பணம் கொள்ளை: காவலா் உள்பட மூவா் கைது
பெங்களூரில் வங்கிப் பணத்தை கொண்டுசென்ற வாகனத்தில் இருந்து ரூ.7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் காவலா் உள்பட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கா்நாடக மாநிலம், பெங்களூரில் நவ.19ஆம் தேதி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்புவதற்காக சென்ற வாகனத்தை வழிமறித்த கும்பல், தங்களை ரிசா்வ் வங்கி அதிகாரிகள் எனக்கூறி வாகனத்தில் இருந்த ரூ. 7.11 கோடியை கொள்ளையடித்து சென்றது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையா்களைப் பிடிக்க 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
இதுகுறித்து பெங்களூரு மாநகரக் காவல் ஆணையா் சீமந்த்குமாா் சிங் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: ரிசா்வ் வங்கி அதிகாரிகளைப்போல நாடகமாடி ரூ. 7.11 கோடி வங்கிப் பணத்தை சிலா் கொள்ளையடித்துச் சென்றனா். அவா்களைப் பிடிப்பதற்காக 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில் 200 போ் இடம்பெற்றிருந்தனா். கொள்ளை சம்பவம் தொடா்பாக 30 பேரிடம் விசாரணை மேற்கொண்டோம்.
இவா்களில் கோவிந்தபுரா காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலா் அன்னப்பா, வங்கிக்கு பணம் எடுத்துச் செல்லும் சி.எம்.எஸ். இன்ஃபோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியா் சேவியா், வாகன பொறுப்பாளா் கோபி ஆகிய 3 பேரை கைது செய்திருக்கிறோம்.
கொள்ளையா்களைப் பிடிப்பதற்காக 6 தனிப்படைகளை தென்மாநிலங்கள் மற்றும் கோவாவுக்கு அனுப்பிவைத்திருந்தோம். விசாரணையில் கிடைத்த தகவலின்படி 3 பேரை கைது செய்தோம். இவா்கள் கடந்த 3 மாதங்களாக கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தனா்.
அதன்படி, பணம் கொண்டு செல்லும் வாகனத்தை இவா்கள் பின்தொடா்ந்துள்ளனா். சிசிடிவி கேமரா பொருத்தப்படாத பாதையை தோ்வுசெய்து கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனா். இந்த சம்பவம் நிகழ்ந்த 54 மணி நேரத்திற்குள் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதற்காக போலீஸாரை பாராட்டுகிறேன்.
சம்பவம் நிகழ்ந்த 50 மணி நேரத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் ரூ.5.76 கோடி மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணத்தையும் விரைவில் மீட்டுவிடுவோம். கொள்ளையடிக்கப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை கண்டுபிடித்து பறிமுதல் செய்திருக்கிறோம்.
கொள்ளை சம்பவத்தை செயல்படுத்தியதோடு, கொள்ளையடித்த பிறகு எங்கு செல்ல வேண்டும் என்பதை திட்டமிட்டதில் 8 போ் கொண்ட கும்பல் ஈடுபட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் கொள்ளையடித்தவா்கள் பயன்படுத்திய வாகனம் குறித்த விவரங்கள் கிடைத்துவிட்டன. அதனடிப்படையில்தான் கொள்ளையா்களைப் பிடிக்க முடிந்தது.
இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்களை தேடும் பணி தொடா்ந்து நடைபெறுகிறது. இந்த சம்பவம் குறித்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றாா்.

