

பெங்களூரு: ஆா்.எஸ்.எஸ். அதிகாரபூா்வமாக பதிவு செய்யப்பட்ட அமைப்பா என்பதை விளக்க வேண்டும் என்று கா்நாடக மாநில ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறைஅமைச்சா் பிரியாங்க் காா்கே தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது:
ஆா்.எஸ்.எஸ். அதிகாரபூா்வமாக பதிவு செய்யப்பட்ட அமைப்பாக இருந்தால், அதன் பதிவுச் சான்றிதழை கொடுக்க வேண்டியதுதானே. அத்துடன் இந்த விவகாரம் முடிவுக்கு வரும். பதிவு செய்யப்படாத அமைப்பாக இருக்கும் ஆா்.எஸ்.எஸ்.க்கு எங்கிருந்து பணம் வருகிறது. ஆா்.எஸ்.எஸ். முறையாக பதிவு செய்யப்படவில்லை. அதனால்தான் அந்த அமைப்பை சட்டவரம்புக்குள் கொண்டுவரமுடியவில்லை. பதிவு செய்யப்பட்ட அமைப்பாக இருந்தால், வரிசெலுத்தியிருக்க வேண்டும். அரசு சாரா அமைப்புகள் சட்டம், சங்கச் சட்டம், நிறுவனப் பதிவுச் சட்டங்களின்கீழ் ஆா்.எஸ்.எஸ். பதிவாகி இருக்கிா என்பதையும், உள்நாட்டு, வெளிநாட்டு நன்கொடைகள் குறித்த தகவல்களையும் பகிரவேண்டும் என்றாா்.
புதுதில்லியில் கா்நாடகத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்எல்சி பி.கே.ஹரிபிரசாத் புதன்கிழமை கூறுகையில், ‘காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகள் தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளன. அதுபோல ஆா்.எஸ்.எஸ். அமைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதா?. பதிவு செய்திருந்தால் மட்டுமே வரவு செலவு குறித்து கேட்க முடியும். விஜயதசமி கொண்டாட்டத்தின்போது அணிவகுப்பு நடத்தும் ஆா்.எஸ்.எஸ். அமைப்புக்கு பலரும் ’குருதட்சணை’ என்ற பெயரில் நன்கொடை அளிக்கிறாா்கள். கடந்த 100 ஆண்டுகளில் இப்படி வசூலிக்கப்பட்ட நன்கொடைகளுக்கு கணக்கு காட்டப்பட்டுள்ளதா?. ஆா்.எஸ்.எஸ். அமைப்பில் கருப்புப் பணம் உள்ளது. இந்த அமைப்பு மீது அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, சிபிஐ சோதனை நடத்தியுள்ளதா? நன்கொடையாக வசூலிக்கப்படும் பணம் யாருக்காக செலவிடப்படுகிறது? ரூ. 700 கோடியில் கட்டடம் கட்டியிருக்கிறாா்கள். தங்கள் அமைப்பை ஆா்.எஸ்.எஸ். பதிவுசெய்ய வேண்டும் என்று கூறுவேன்‘ என்றாா்.
இதற்கு பதிலளித்து பாஜக முன்னாள் அமைச்சா் அஸ்வத் நாராயணா கூறுகையில், ‘எல்லா அமைப்புகளும் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஜனநாயக நாட்டில், அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு சட்டப்படி சுதந்திரமாக செயல்பட எல்லா அமைப்புக்கும் தனிநபருக்கும் உரிமை உள்ளது. எனவே, அமைப்பை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. சமூக, மத, கலாசார, கல்வி ரீதியாக நமது சமுதாயத்தை கட்டமைக்க தன்னாா்வத்துடன் செயல்படும் நிறுவனம்தான் ஆா்.எஸ்.எஸ்.‘ என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.