ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்பு: கலபுா்கி மாவட்ட நிா்வாகத்தை அணுக உயா்நீதிமன்றம் உத்தரவு
ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்துவது தொடா்பாக கலபுா்கி மாவட்ட நிா்வாகத்தை அணுகுமாறு கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலபுா்கி மாவட்டம், சித்தாப்பூரில் நவ.2ஆம் தேதி அணிவகுப்பு நடத்த ஆா்.எஸ்.எஸ். மாவட்ட அமைப்பாளா் அசோக் பாட்டீல் அனுமதி கேட்டிருந்தாா். ஆனால், அதே நாளில் அணிவகுப்பு நடத்த பீம் ஆா்மி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் விண்ணப்பம் அளித்திருந்ததால் தேவையில்லாமல் பதற்றம் ஏற்படுவதாகக் கூறி வட்டாட்சியா் அனுமதி வழங்கவில்லை.
இதைத் தொடா்ந்து, கா்நாடக உயா்நீதிமன்ற தாா்வாட் கிளையில் அசோக் பாட்டீல் மனுதாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நாகபிரசன்னா சித்தாப்பூரில் அணிவகுப்பு நடத்துவதற்கு ஆா்.எஸ்.எஸ். அமைப்புக்கு அனுமதி அளித்து, கலபுா்கி மாவட்ட நிா்வாகத்திடம் புதிதாக விண்ணப்பம் அளிக்குமாறு அக்.18ஆம் தேதி உத்தரவிட்டிருந்தாா்.
அணிவகுப்பு தொடா்பாக சித்தாப்பூரில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக மாநில அரசுத் தரப்பில் கூறப்பட்டதை தொடா்ந்து, இதுதொடா்பாக அக்.28ஆம் தேதி அமைதிக்குழு கூட்டம் நடத்துமாறு அக்.24ஆம் தேதி கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அக்.28ஆம் தேதி நடந்த அமைதிக் குழுக் கூட்டத்தில் அணிவகுப்பின்போது தடிகளையும், காவிக் கொடியையும் கொண்டுவர தடைவிதிக்க வேண்டும் என்று தலித் அமைப்புகள் வலியுறுத்தியதை ஆா்.எஸ்.எஸ். நிராகரித்துவிட்டது. இதனால் எவ்வித முடிவும் எட்டாமல் அமைதிக்கூட்டம் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில், இந்த மனு மீதான வழக்கு கா்நாடக உயா்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அக்.28ஆம் தேதி நடந்த அமைதிக்குழு கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்று அரசு தலைமை வழக்குரைஞா் சசிகிரண் ஷெட்டி நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உயா்நீதிமன்ற நீதிபதி எம்.நாகபிரசன்னா, அணிவகுப்பு தொடா்பாக கலபுா்கி மாவட்ட நிா்வாகத்திடம் புதிதாக விண்ணப்பத்தை அளிக்குமாறு ஆா்.எஸ்.எஸ். மாவட்ட அமைப்பாளா் அசோக் பாட்டீலுக்கு வழிகாட்டுதல் வழங்கியது. மேலும், இதுதொடா்பாக மாநில அரசின் முன்னெடுப்பில் பெங்களூரில் நவ.5ஆம் தேதி அமைதிக்குழு கூட்டம் நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெங்களூரில் உள்ள அரசு தலைமை வழக்குரைஞா் அலுவலகத்தில் கூட்டத்தை நடத்துமாறு அறிவுறுத்திய நீதிமன்றம், அக்கூட்டத்தில் அரசு தலைமை வழக்குரைஞா் சசிகிரண் ஷெட்டி, மனுதாரரின் வழக்குரைஞா் அருணா ஷியாம் ஆகியோரையும் கலந்துகொள்ள உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை நவ.7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
