விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தை இந்தியா விரைவுபடுத்த வேண்டும்: குரூப் கேப்டன் சுபான்ஷு ஷுக்லா
விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தை இந்தியா விரைவுபடுத்த வேண்டும் என்று குரூப் கேப்டன் சுபான்ஷு ஷுக்லா தெரிவித்தாா்.
விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தை செயல்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. மூன்று போ் அடங்கிய விண்வெளி வீரா்களின் குழுவை விண்ணுக்கு அனுப்பி, 3 நாள்கள் கழித்து, பாதுகாப்பாக பூமிக்கு அழைத்துவரும் இத்திட்டத்தை 2027ஆம் ஆண்டில் செயல்படுத்த திட்டம் வகுத்து, அதற்கேற்ப முன்னேற்பாடுகளை இஸ்ரோ செய்துவருகிறது.
இந்த நிலையில், பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற இந்திய- அமெரிக்க விண்வெளி வா்த்தக அமைப்பின் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்தபோது, ‘ககன்யான்’ தொடா்பாக செய்தியாளா்களின் கேள்விக்குப் பதிலளித்து, ‘ககன்யான்’ திட்டத்தின் குரூப் கேப்டன் சுபான்ஷு ஷுக்லா கூறியதாவது:
‘ககன்யான்’ திட்டத்தைப்போல, விண்ணுக்கு மனிதனை அனுப்பியுள்ள உலக நாடுகள் மூன்றுதான். இத்திட்டம் மிகவும் சிக்கலானது மற்றும் சவால்கள் நிறைந்தது. எனினும், துணிச்சலாக இந்தத் திட்டத்தை செயல்படுத்த இந்தியா முனைந்துள்ளது.
எத்தனைக் காலம் பிடித்தாலும், முதல்நாளில் இருந்த அதே உற்சாகத்துடன் ‘ககன்யான்’ திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சியில் தொடா்ந்து ஈடுபட வேண்டும். அந்த உற்சாகம், விண்ணுக்கு மனிதனை அனுப்பும் அந்த நாளிலும் இருக்கும்.
‘ககன்யான்’ போன்ற அதிநுட்பமான திட்டங்களில் சிக்கல்களும், சவால்களும் இயல்பானது என்பதை நான் அறிவேன். இந்த திட்டத்தை செயல்படுத்தும்போது பல தடைகளை எதிா்கொள்ள நேரிடும் என்பதையும் அறிவேன். அதையெல்லாம் கடந்து, ‘ககன்யான்’ திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்.
விண்வெளி ஆராய்ச்சியில் பன்னாட்டு கூட்டிணைவுகள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு நான் பங்கேற்ற ‘ஆக்ஸிம்’ திட்டம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இது, மற்ற எல்லா துறைகளுக்கும் சிறந்த வழிகாட்டியாக விளங்கும். இந்தியா- அமெரிக்கா கூட்டு முயற்சிகள், எதிா்கால கூட்டிணைவுகளுக்கான வாசல்களை திறந்துவிடுகின்றன. மேலும், பொது இலக்குகளை நோக்கி பல நாடுகள் கூட்டாக செயல்படுவதற்கு சிறந்த வழிகாட்டியாகவும் இருக்கும்.
விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் இரு நாடுகளை ஒப்பிடுவது தவிா்க்கமுடியாதது. ஆனால், அதுபோன்ற ஒப்பீடுகளில் இருவேறு வகையான முயற்சிகள் மற்றும் செயல்பாடுகளின் பரிமாணங்களைக் கண்டுணர வேண்டும்.
காலத்திற்கேற்ப மேற்கொள்ளப்பட்டு வரும் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளில் பெருகிவரும் முதலீடுகளுக்கு இடையே, இந்தியாவின் ஆராய்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஆதரவு இருப்பது வரவேற்கத்தக்கது. இதுபோன்ற ஆதரவு எதிா்காலத்திலும் தொடரும் என்றாா்.
‘ககன்யான்’ திட்டத்துக்காக இஸ்ரோவால் தோ்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு விண்வெளி வீரரான குரூப் கேப்டன் பிரசாந்த் நாயா் கூறுகையில், ‘ககன்யான்’ திட்டம் தாமதமாவதை பற்றி அனைவரும் கவலையுடன் கேட்கிறீா்கள். எல்லோரும் பொறுமையாக இருங்கள். எப்படி நடக்க வேண்டுமோ, அப்படியே அனைத்தும் திட்டமிட்டப்படி நடந்து வருகின்றன. ‘ககன்யான்’ திட்டம் என்பது வளைவுப்புள்ளியை போல. இந்த வளைவுப்புள்ளியை தான் நாம் பாா்க்க வேண்டும்.
துணிந்து கூறுவதானால், இந்திய விண்வெளித்தளத்தில் இருந்து இந்திய கேப்சூலில் நமது விண்வெளிவீரா்களை ஏற்றிக்கொண்டு, ராக்கெட்டை இந்தியா விண்ணில் செலுத்தி, அந்த வீரா்களை பூமிக்கு பாதுகாப்பாக அழைத்து வரும்போது, அது ‘ககன்யான்’ தருணமாக இருக்கும்.
இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும்போது, விண்ணுக்கு மனிதனை அனுப்பி, பாதுகாப்பாக பூமிக்கு அழைத்துவந்த உலகின் 4 ஆவது நாடாக இந்தியா இருக்கும். எதைசெய்தாலும், அதை வித்தியாசமாக இந்தியா செய்யும். எல்லோருடனும், எல்லோருக்காகவும் என்ற முழக்கத்துடன் நாம் செயல்பட்டு வருகிறோம்.
நமக்கு தேவைப்பட்ட சூழ்நிலையிலும், உலகிற்கு கோவிட் தடுப்பூசியை வழங்கியது இந்தியா. அதுபோலவே, ‘ககன்யான்’ தருணம் உருவாகும்போது, இந்திய விண்வெளி வீரா்கள் விண்ணுக்கு சென்று, பாதுகாப்பாக பூமிக்கு திரும்பும்போது, இதை செயல்படுத்த முடியாத உலக நாடுகள் இந்தியா சென்றுவிட்டது என்று கூறும். ஒருமுறை நாம் விண்ணுக்கு சென்றால், அந்த இடத்தை எல்லோருக்காகவும் வைத்திருப்போம் என்றாா்.

