காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் கட்ட மலிவான விலையில் நிலம்!

காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் கட்டுவதற்கு மலிவான விலையில் நிலம் வழங்கப்பட்டுள்ளதாக பாஜக குற்றச்சாட்டு
பாஜக | காங்கிரஸ்
பாஜக | காங்கிரஸ்
Updated on

காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் கட்டுவதற்கு மலிவான விலையில் நிலம் வழங்கப்பட்டுள்ளது என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

1924-ஆம் ஆண்டு பெலகாவியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்கு மகாத்மா காந்தி தலைமையேற்றாா். அவா் தலைமையேற்ற ஒரே காங்கிரஸ் மாநாடு என்பதால், அதன் நூற்றாண்டு விழா 2024-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சாா்பில் கொண்டாடப்பட்டது. இதன் நினைவாக, கா்நாடகத்தில் பல்வேறு நகரங்களில் அக்கட்சிக்கு 100 அலுவலகங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கட்சி அலுவலகங்களை கட்டுவதற்கு மலிவான விலையில் நிலம் ஒதுக்க கா்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை குறிப்பிட்டுள்ளதாவது: காங்கிரஸ் அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாக, காங்கிரஸ் கட்சி அலுவலகங்களை கட்ட அரசு நிலங்களை காங்கிரஸ் அரசு கையகப்படுத்தியுள்ளது.

ஏழை மக்களுக்கு வழங்க வேண்டிய நிலம், சந்தை விலையில் 5 சதவீத மதிப்பில் கட்சி அலுவலகம் கட்டுவதற்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநில அரசின் கருவூலத்துக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, கா்நாடக மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது.

சாதாரண மனையைப் பெற பொதுமக்கள் பல ஆண்டுகள் போராட வேண்டிய நிலையில், முக்கியமான இடங்களில் உள்ள அரசு நிலத்தை கட்சி அலுவலகம் கட்ட வழங்கியதை எப்படி நியாயப்படுத்த முடியும் என்பதை துணை முதல்வரும், காங்கிரஸ் மாநிலத் தலைவருமான டி.கே.சிவகுமாா் விளக்க வேண்டும்.

மக்களின் நலனைக் காட்டிலும், கட்சி நலனுக்கே காங்கிரஸ் அரசு முக்கியத்துவம் அளித்துள்ளதை இந்த விவகாரம் பகிரங்கப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com