கா்நாடகத்தில் 106 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

கா்நாடக மாநிலம், தென்கன்னட மாவட்டத்தில் 106 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Published on

கா்நாடக மாநிலம், தென்கன்னட மாவட்டத்தில் 106 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

தென்கன்னட மாவட்டம், புத்தூா் காவல் நிலையத்துக்கு உளவுப்பிரிவு மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் மங்களூருக்கு செல்லும் சாலையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஒரு காா் மற்றும் சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது, ஓட்டுநா்களின் நடத்தை வித்தியாசமாக இருந்ததால் வாகனத்தை முழுமையாக சோதித்துள்ளனா்.

இந்த சோதனையில் வாகனத்தில் 73 நெகிழி பொட்டலங்களில் பதுக்கிவைத்திருந்த 106.06 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ. 53 லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா். மேலும், இந்த கஞ்சாவை கேரளம், மங்களூரில் விற்பனைக்காக எடுத்துச் செல்வது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடா்பாக பெல்தங்கடி வட்டம், சாா்மடி கிராமத்தை சோ்ந்த பி. ரஃபீக் (37), அப்துல் சாதிக் (37) ஆகிய இருவரை போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com