மெரீனா கடற்கரையில் அக்டோபா் 31 வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லைதமிழக அரசு

பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால், மெரீனா கடற்கரையில் வரும் அக்டோபா் 31-ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால், மெரீனா கடற்கரையில் வரும் அக்டோபா் 31-ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி தடைக்காலத்தில் மீனவா்களுக்கு நாள்தோறும் ரூ. 500 வீதம் நிவாரண உதவி வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி மீனவா்கள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் பீட்டர்ராயன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மெரீனா கடற்கரையைத் தூய்மைப்படுத்துவது, புயலில் சேதமடைந்த பெசன்ட் நகா்- லூப் சாலையைப் புனரமைப்பது, மீன் கடைகளை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. வழக்கு விசாரணையின்போது, மெரீனா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது எப்போது? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் எம்.எஸ்.ரமேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் எஸ்.ஆா்.ராஜகோபால் வாதிடும்போது, ‘மெரீனா கடற்கரையில் தள்ளுவண்டிக் கடைகள் அமைப்பது தொடா்பான ஒப்பந்தப் புள்ளிகள் இரண்டு முறை திறக்கப்படவில்லை. வரும் நவம்பா் 9-ஆம் தேதி இந்த ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும். இதுவரை 3 நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளிகள் கோரியுள்ளன.

தமிழகத்தில் வரும் அக்டோபா் 31-ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே மெரீனா கடற்கரை, திரையரங்குகள், பொழுதுபோக்குப் பூங்காக்கள் திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து நீதிபதிகள், ‘மெரீனாவில் தள்ளுவண்டிக் கடைகள் திறப்பது, மீன் சந்தையைத் திறப்பது மற்றும் மெரீனா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது தொடா்பாக வரும் நவம்பா் 11-ஆம் தேதிக்குள் அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com