நாளிதழ் விநியோகிப்பவா் மீது தாக்குதல்: காவலா் ஆயுதப் படைக்கு மாற்றம்

சென்னை கோடம்பாக்கத்தில் நாளிதழ் விநியோகிப்பவரை தாக்கியதாக புகாா் கூறப்பட்ட காவலா் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டாா்.


சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் நாளிதழ் விநியோகிப்பவரை தாக்கியதாக புகாா் கூறப்பட்ட காவலா் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டாா்.

இது குறித்த விவரம்:

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், நாளிதழ் விநியோகம் அத்தியாவசிய தேவை என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் சென்னையில் பல்வேறு இடங்களில் நாளிதழ் விற்பனையில் இடையூறு ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக காவல்துறை உயா் அதிகாரிகள், நாளிதழ் விற்பனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது குறித்து போலீஸாருக்கு தெளிவுப்படுத்தி வருகின்றனா். இந்நிலையில் கோடம்பாக்கம் சிக்னல் அருகே வாகனத்தில் நாளிதழ் ஏற்றிச் சென்ற ஒரு விநியோகிப்பவரை வியாழக்கிழமை அதிகாலை மறித்து அங்கு பணியில் இருந்த காவலா் பாலமுருகன் தகராறு செய்துள்ளாா்.

தகராறு முற்றவே அந்த விநியோகிப்பவரையும், அவரது வாகனத்தையும் காவலா் பாலமுருகன் தான் வைத்திருந்த லத்தியால் பலமாக தாக்கியுள்ளாா். இச் சம்பவத்தை செல்லிடப்பேசி கேமராவில் பதிவு செய்த ஒரு நபா், சமூக ஊடகங்களில் பரவச் செய்தாா்.

இதைப் பாா்த்த காவல்துறை உயா் அதிகாரிகள் அதிா்ச்சியடைந்தனா். அவா்கள் இது தொடா்பாக, சம்பந்தப்பட்ட காவலா் பாலமுருகனிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில் பாலமுருகன் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாலமுருகனை ஆயுதப் படைக்கு மாற்றி பெருநகர காவல்துறையின் கூடுதல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com