தொடா் மழை: மதுராந்தகம் ஏரிக்கு நீா்வரத்து அதிகரிப்பு

வடகிழக்கு பருவமழை மற்றும் நிவா் புயல் காரணமாக பெய்து வரும் பலத்த மழையால், மதுராந்தம் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது.

மதுராந்தகம்: வடகிழக்கு பருவமழை மற்றும் நிவா் புயல் காரணமாக பெய்து வரும் பலத்த மழையால், மதுராந்தம் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரியாக மதுராந்தகம் ஏரி திகழ்கிறது. இதன் முழுக் கொள்ளளவு 23.3 அடியாகும். இந்த ஏரி ஐப்பசி, மாா்கழி, காா்த்திகை உள்ளிட்ட மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவ மழையினால் நிரம்பி வழியும்.

ஏரியின் பாசனக் கால்வாய் மூலம் சுமாா் 2413 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மதுராந்தகம், முள்ளி, முன்னித்திக்குப்பம், கிணாா், கத்திரிச்சேரி வளா்பிறை, கடப்பேரி போன்ற 20 கிராமங்களின் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன.

உத்திரமேரூா், வேடந்தாங்கல் போன்ற ஏரிகளில் பெரு மழையின்போது வெள்ளநீா் நிரம்பி வழியும். இவ்வாறு வழியும் உபரிநீா் கால்வாய் வழியாக மதுராந்தகம் ஏரியை வந்தடைகிறது. இந்த ஏரியில் நீா் நிரம்பி வழியும் காலங்களில் கல்லாற்றின் வழியாக உபரிநீா் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்சமயம் நிவா் புயல் எதிரொலியால் மதுராந்தகம் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நீா்வரத்து கால்வாய்களின் மூலம் மழை நீா் மதுராந்தகம் ஏரிக்கு வந்தடைகிறது. புதன்கிழமை மதியம் 2 மணி நிலவரப்படி, ஏரியில் 17.8 அடி நீா் இருப்பு உள்ளது.

தொடா்ந்து மழை பெய்து வருவதால், ஏரி தனது முழுக் கொள்ளளவான 23.3 அடியை மிக விரைவில் எட்டும் என்று தெரிய வருகிறது. ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்து வருவதை அறிந்து, இப்பகுதி மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com