இலங்கை விஞ்ஞானிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

உயிருக்குப் போராடிய நிலையில் இலங்கையில் இருந்து சரக்கு விமானத்தில் சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட விஞ்ஞானிக்கு
இலங்கை விஞ்ஞானிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

உயிருக்குப் போராடிய நிலையில் இலங்கையில் இருந்து சரக்கு விமானத்தில் சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட விஞ்ஞானிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் மறுவாழ்வு அளித்துள்ளனா் ரேலா மருத்துவமனை மருத்துவா்கள்.

இது குறித்து ரேலா மருத்துவமனைத் தலைவா் பேராசிரியா் முகமது ரேலா செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

இலங்கை அரசின் அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சகத்தில் விஞ்ஞானியான கருணாரத்ன கல்லீரல் கோளாறு காரணமாக கொழும்பு அரசு மருத்துவமனையில் 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தாா். நோய் முற்றியநிலையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம்தான் அவரது உயிரைக் காப்பாற்ற முடியும் என்று மருத்துவா்கள் அறிவுறுத்தினா்.

இந்தியாவில் ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான அனுமதியைப் பெற்ற கருணாரத்ன குடும்பத்தினா், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைத் தரவுகளை ரேலா மருத்துவமனைக்கு அனுப்பி இணையதளம் மூலம் மருத்துவ ஆலோசனைகள் பெற ஏற்பாடு செய்தனா். கருணாரத்னவுக்கு அவரது உறவினா் யாரேனும் கல்லீரல் தானம் அளித்தால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும் என்று மருத்துவா்கள் தெரிவித்ததால் அவரது மனைவி சுமாலி கல்லீரல் தானம் வழங்க சம்மதித்தாா்.

கரோனா நோய்தொற்று காரணமாக பயணிகள் விமான சேவை முற்றிலும் தடைசெய்யப்பட்ட நிலையில், இலங்கை அரசின் பெரு முயற்சி காரணமாக கருணாரத்னவை அவரது மனைவி சுமாலி தனது சகோதரா் ஏகநாயக உதவியுடன் சரக்கு விமானம் மூலம் கொழும்பில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தாா்.

சுமாலிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டபோது ,அவரது குடலில் புற்றுநோய் கட்டி உருவாகி இருப்பது தெரியவந்தது. அவரிடமிருந்து கல்லீரல் தானம் பெற முடியாத நிலையில் அவரது சகோதரா் ஏகநாயக கல்லீரல் தானம் வழங்க முன் வந்தாா். கணவா் கருணாரத்னவுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும், மனைவி சுமாலிக்கு புற்றுநோய் கட்டி அறுவை சிகிச்சையும் கடந்த செப்டம்பா் 24 -ம் தேதி மேற்கொள்ளப்பட்டது. மூவரும் தற்போது நன்கு குணமடைந்து ஓரிரு நாளில் இலங்கைக்குத் திரும்ப உள்ளனா் என்றாா் பேராசிரியா் முகமது ரேலா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com