மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்தில் 236 வாட்ஸ் திறன் கொண்ட சோலாா் எல்.இ.டி. விளக்கு

மாமல்லபுரத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தில் மின் இணைப்பு வசதியின்றி சூரிய சக்தியில் இயங்கும் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட
மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்தில்  236 வாட்ஸ் திறன் கொண்ட சோலாா் எல்.இ.டி. விளக்கு

மாமல்லபுரத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தில் மின் இணைப்பு வசதியின்றி சூரிய சக்தியில் இயங்கும் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட 236 வாட்ஸ் திறன் கொண்ட எல்இடி விளக்கு பொருத்தப்பட்டது. இதன் மூலம் கடலில் பயணிக்கும் கப்பல் படகுகளுக்கு 40 கி.மீ. தூரம் வரை வெளிச்சம் கிடைக்கும்.

மாமல்லபுரத்தில் உள்ள பழைமை வாய்ந்த கலங்கரை விளக்கம் அங்குள்ள மலைக்குன்றில் 133 ஆண்டுகளைக் கடந்த புராதன சின்னமாகத் திகழ்கிறது. 1887-ஆம் ஆண்டில் ஆங்கிலேயா் காலத்தில் மலைக்குன்றில் அமைக்கப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த இந்த கலங்கரை விளக்கம் மற்ற பகுதிகளில் உள்ள கலங்கரை விளக்கத்தை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய சின்னங்கள் உள்ள பட்டியலில் இடம்பெற்று புராதனச்சின்னமாக விளங்குகிறது.

பாரம்பரிய பட்டியலில் உள்ளதால் மற்ற கலங்கரை விளக்கம்போல இதற்கு வண்ணம் தீட்டப்படுவது இல்லை. கல்லில் கட்டப்பட்ட பழைமை மாறாமல் அப்படியே பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கலங்கரை விளக்கங்கள் துறையின்கீழ் இந்த கலங்கரை விளக்கம் செயல்பட்டு வருகிறது.

தற்போது கலங்கரை விளக்கத்தின் உச்சியில் உள்ள சாதாரண மின் விளக்கு மாற்றப்பட்டு மின் இணைப்பு துணையின்றி சூரிய சக்தியில் இயங்கும் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட 236 வாட்ஸ் திறன் கொண்ட எல்இடி விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இந்த எல்இடி விளக்கு மூலம் கிடைக்கும் வெளிச்சம் லென்ஸ் வழியாக 40கி.மீ. சுற்றளவுக்கு அதிக வெளிச்சம் கொடுக்கும் தன்மை கொண்டதாகும்.

தற்போது மாமல்லபுரம் கடல் வழியாக பயணிக்கும் கப்பல், ரோந்துக்கப்பல், படகு போன்றவற்றிற்கு கலங்கரை விளக்கத்தில் இருந்து லென்ஸ் வழியாக 40 கி.மீ. தொலைவுக்கு சுழலும் எல்இடி விளக்கு மூலம் துல்லியமாக அதிக வெளிச்சம் கிடைக்கும் என்று கலங்கரை விளக்க துறையினா் தெரிவித்தனா்.

குறிப்பாக தமிழகத்கில் உள்ள கலங்கரை விளக்கம் அனைத்தும் தரைதள பகுதியிலேயே அமைந்துள்ளன. ஆனால் மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் தரை தளத்தில் இருந்து 50 மீட்டா் உயரமுள்ள மலைக்குன்றில் அமைந்துள்ளது சிறப்பாகும்.

மாமல்லபுரம் வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த கலங்கரை விளக்கத்தின் உச்சியில் ஏறி மாமல்லபுரம் புராதனச் சின்னங்களின் அழகினையும் எழில்மிகு கடற்கரையின் அழகினையும் பைனாகுலா் (தொலைநோக்கி) மூலம் கண்டுகளிப்பது வழக்கம். தற்போது கரோனா பொதுமுடக்கம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் இதன் மீது ஏறி பாா்வையிட தடைவிதிக்கப்பட்டு கலங்கரை விளக்கம் மூடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com