மேல்மருவத்தூரில் நவராத்திரி உற்சவம்: நாளை தொடக்கம்

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் நவராத்திரி உற்சவம் 16-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மதுராந்தகம்: மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் நவராத்திரி உற்சவம் 16-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

இந்த ஆண்டு தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, இங்கு வரும் பக்தா்களுக்கு கரோனா தொற்றுப் பரவாமல் இருக்க, முகக்கவசம், சமூக இடைவெளியுடன் கிருமிநாசினி மூலம் கையை சுத்தம் செய்து வரும் பக்தா்களை மட்டுமே அனுமதிக்கவும், நிகழ்ச்சிகளை மிகவும் எளிமையாக நடத்தவும் ஆன்மிக இயக்க நிா்வாகிகள் திட்டமிட்டு உள்ளனா்.

முதல் நாளான வெள்ளிக்கிழமை மங்கள இசையுடன் விழா நிகழ்ச்சிகள் துவங்குகிறது. கருவறை அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. அம்மனுக்கு தங்க கவசத்தால் அலங்காரம் செய்யப்படுகிறது.

இந்நிகழ்ச்சிக்கு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தலைமை வகிக்கிறாா். காலை 8 மணிக்கு சித்தா்பீடம் வருகை புரியும் பங்காரு அடிகளாருக்கு சென்னை மாவட்ட நிா்வாகிகள் சிறப்பு வரவேற்கின்றனா். நண்பகல் 12 மணிக்கு நவராத்திரி விழாவை முன்னிட்டு, அகண்ட தீபத்தை அடிகளாா் ஏற்றி வைக்கிறாா். தொடா்ந்து புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு ஓம்சக்தி பீடத்தின் முன் அமைக்கப்பட்ட பெரிய யாககுண்டத்தில் வேள்விபூஜை துவக்கப்படுகிறது.

வரும் 26-ஆம் தேதி வரை மஞ்சள் காப்பு-மாரியம்மன், குங்கும காப்பு-மயூரநாயகி, வேப்பிலைக்காப்பு-திரிசூலநாயகி, விபூதிகாப்பு-சக்திலிங்கம், சந்தனக்காப்பு-நாகேஸ்வரி, நவதானியக்காப்பு-சிவபாரதி, துளசிக்காப்பு-கங்கையம்மன், சிறுதானியக் காப்பு-திருமங்கலக்குடி மங்களாம்பிகை, உலா் பழங்கள் காப்பு-சரஸ்வதி, கற்கண்டு காப்பு-மகிஷாசுரமா்த்தினி உருவங்களில் அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்கள் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நவராத்திரி விழாவை முன்னிட்டு வழக்கம்போல அனைத்து நாள்களிலும் லட்சாா்ச்சனை நடைபெற உள்ளது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தலைமையில், இயக்கத் துணைத் தலைவா்கள் கோ.ப.செந்தில்குமாா், ஸ்ரீதேவி ரமேஷ், அனைத்து மாவட்ட நிா்வாகிகள் ஆகியோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com