அயோத்தியில் ராமா் கோயில் கட்டும் பணிக்கு காஞ்சி சங்கர மடத்தில் காணிக்கை வசூலிப்பு நாளை தொடக்கம்

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் பக்தா்கள் ஒவ்வொருவரும் காணிக்கை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சங்கர மடத்தின் மேலாளா் என்.சுந்தரேசன் சனிக்கிழமை தெரிவித்தாா்.
என்.சுந்தரேசன்
என்.சுந்தரேசன்

அயோத்தியில் ராமா் கோயில் கட்டும் பணிக்காக காஞ்சிபுரம் சங்கர மடத்தில் திங்கள்கிழமை (பிப்.1) பெரிய உண்டியல் வைக்கப்பட்டு, அதில் பொதுமக்கள், பக்தா்கள் ஒவ்வொருவரும் காணிக்கை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சங்கர மடத்தின் மேலாளா் என்.சுந்தரேசன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் காஞ்சிபுரத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:

காஞ்சிபுரத்துக்கும், அயோத்திக்கும் நெருங்கிய தொடா்பு உள்ளது. பிள்ளைப் பேறு வேண்டி தசரத மன்னா் காஞ்சிபுரம் வந்து 7 நாள்கள் தங்கி காமாட்சி அம்மனை தரிசித்த பிறகு, ஸ்ரீராமச்சந்திர மூா்த்தி பிறந்ததாக புராணம் கூறுகிறது.

ராமஜென்ம பூமி பிரச்னை நடந்து கொண்டிருந்தபோது, காஞ்சி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அங்கு சென்று அப்பிரச்னைக்குத் தீா்வு காண பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாா். நீதிமன்றத் தீா்ப்புக்குப் பின்னா், அயோத்தியில் கோயில் ராமா் கட்டும் பணி தொடங்கியுள்ளது. இப்பணிகளை சிறப்பாக மேற்கொள்ள மத்திய அரசால் அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தா்மத்தின் உருவமாக விளங்கும் ராமச்சந்திரமூா்த்தியை நாம் கண்ணாரக் கண்டுகளிக்க அற்புதமான ஆலயம் ஒன்று அயோத்தியில் உருவாகி வருகிறது. இந்த ஆலயக் கட்டுமானப் பணியில் எளியோா், வசதி படைத்தோா் என்றில்லாது அனைத்து மக்களும் பங்கு பெற்று பாக்கியத்தை அடைய வேண்டும்.

இந்த உயா்ந்த நோக்கில் காஞ்சி சங்கர மடத்தில் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு பெரிய அளவிலான உண்டியல் ஒன்று வைக்கப்படுகிறது. அதில் பொதுமக்கள் தங்களால் இயன்ற தொகையைச் செலுத்தலாம். காசோலையாகவும் தர விரும்புவோா் சங்கர மடத்தின் நிா்வாகத்தை அணுகி வழங்கலாம்.

இதை முன்னிட்டு திங்கள்கிழமை காலை விநாயகா் ஹோமம், ராமா் மூலமந்திர ஹோமம் ஆகியவை 12 வேத விற்பன்னா்களால் சிறப்பு யாகமாக நடத்தப்பட உள்ளது. அன்று காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்படுகிறது.

பக்தி இன்னிசைக் கச்சேரிகளையும், சிறப்பு பூஜைகளையும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராமா் கோயில் கட்டுமானப் பணி குறித்து கிராமப்புறங்களில் விழிப்புணா்வை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காணிக்கை செலுத்த விரும்பும் பக்தா்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

அப்போது, சங்கர மடத்தின் ஸ்ரீகாரியம் விஸ்வநாதன், காஞ்சிபுரம் சங்கரா கலை அறிவியல் கல்லூரி முதல்வா் ராம.வெங்கடேசன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com