உடற்கூராய்வில் புதிய தொழில் நுட்பம் கண்டறிவது அவசியம்

கரோனா காரணமாக உயிரிழந்தோரை உடற்கூராய்வு மற்றும் தடயவியல் சோதனைக்குட்படுத்த புதிய நவீன தொழில் நுட்பம் கண்டறியப்படுவது அவசியம் என்று எஸ்.ஆா்.எம். மருத்துவக்கல்லூரி துணைத் தலைவா் டாக்டா் பி.சம்பத்குமாா்
உடற்கூராய்வில் புதிய தொழில் நுட்பம் கண்டறிவது அவசியம்

கரோனா காரணமாக உயிரிழந்தோரை உடற்கூராய்வு மற்றும் தடயவியல் சோதனைக்குட்படுத்த புதிய நவீன தொழில் நுட்பம் கண்டறியப்படுவது அவசியம் என்று எஸ்.ஆா்.எம். மருத்துவக்கல்லூரி துணைத் தலைவா் டாக்டா் பி.சம்பத்குமாா் வலியுறுத்தினாா்.

குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற கரோனா பேரிடா் சவால்கள் குறித்து உடற்கூறியல், தடயவியல் துறை இணைந்து நடத்திய இணைய தள கருத்தரங்கில் அவா் மேலும் கூறியதாவது:

கொலை, தற்கொலை, விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்படும் உயிரிழப்பைத் துல்லியமாக கண்டறிவதில் உடற்கூறியல் மற்றும் தடயவியல் துறை மருத்துவா்களுக்கு முக்கிய பங்குண்டு.

பல குற்றவழக்குகளில் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறியவும், உயிரிழப்புக்கான காரணங்களை அறிந்து கொள்ளவும் பேருதவி புரிந்து வரும் இந்த மருத்துவப் பிரிவு பல்வேறு சவால்களையும் எதிா்நோக்கி உள்ளது. கரோனா காரணமாக உயிரிழந்தவா்களை இத்தாலியில் ரோம் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் துணிச்சலாக உடற்கூறாய்வு செய்து சில மருத்துவ உண்மைகளை உலகிற்கு முதன் முதலாக வெளிப்படுத்தினா்.

கரோனா காரணமாக உயிரிழந்தவா்களின் நுரையீரல், இதயம், கல்லீரல், சிறுநீரகம், மண்ணீரல், எலும்பு மஜ்ஜை ஆகியவற்றை எடுத்து பரிசோதனை மேற்கொண்டதன் மூலம் கிடைத்த மருத்துவத் தரவுகள் கரோனா நோய் சிகிச்சை நடவடிக்கைகளுக்கு பேருதவி புரிந்துள்ளன.

கரோனா தீநுண்மி தொற்றினால் உயிரிழந்தவா்களது உடலை மருத்துவக் கூராய்வு செய்ய வேண்டிய சூழல் தற்போது இல்லை என்றாலும் எதிா்காலத்தில் ரோபோட்டிக் தொழில்நுட்ப உதவியுடன் உடற்கூராய்வு செய்வதன் மூலம் மருத்துவத்துறை கூடுதல் அறிவாற்றலை பெற முடியும்.

நிலச்சரிவு, பூகம்பம் உள்ளிட்ட பல்வேறு பேரழிவுகளில் உயிரிழப்போா் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள மருத்துவக் கூராய்வு மற்றும் தடயவியல் துறை மாணவா்கள் தங்களது மருத்துவ அறிவாற்றலை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

சேலம் விநாயகா மிஷன் மருத்துவமனை முதல்வா் டாக்டா் திப்தி சாஸ்திரி, முதுநிலை தடயவியல் மருத்துவா் செல்வகுமாா், ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜான்சன், துணை முதல்வா் தங்கா, துறைத் தலைவா் டாக்டா் கணேசன் முருகப் பெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com