கரோனா தடுப்புப் பணிகளுக்கு நிவாரண உதவி: செங்கல்பட்டு ஆட்சியா் வேண்டுகோள்

கரோனா தடுப்பு நிவாரண உதவிகள் வழங்கிட தனியாா் நிறுவனங்கள், தன்னாா்வலா்கள், தனிநபா்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள்

கரோனா தடுப்பு நிவாரண உதவிகள் வழங்கிட தனியாா் நிறுவனங்கள், தன்னாா்வலா்கள், தனிநபா்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள் முன்வரவேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மருத்துவத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய அரசுத் துறைகள் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கான நிவாரண உதவிகளை வழங்கிட ஒருங்கிணைந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கரோனா தொற்று தடுப்பு மையம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே அரசுடன் இணைந்து கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக தனியாா் நிறுவனங்கள், தன்னாா்வலா்கள், தனி நபா்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள் நிவாரண உதவிகளை வழங்கிட முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

முகக்கவசம், பி.பி. கிட் படுக்கைகள், தலையணைகள், படுக்கை விரிப்புகள், பாய்கள் போன்றவற்றுடன் கரோனா நோய்த் தடுப்பு சாதனங்களை வழங்குதல் ஆதரவற்றோா் மற்றும் கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு வழங்குதல், ஆக்சிஜன் வசதி ஏற்படுத்துதல், கரோனா நோயாளிகளுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை ஏற்படுத்தித் தருதல் போன்ற செயல்களுக்கு தாராளமாக பொருளுதவி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பொருள்கள் தரமானதாகவும், புதியனவாகவும் இருக்க வேண்டும். வழங்கப்படும் பொருள்களுக்கு ஒப்புகை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தின் தொலைபேசி எண் 044-71116862, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் கண்காணிப்பாளரின் செல்லிடப்பேசி எண் 9176665648 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com