மாமல்லபுரத்தில் மின்சாரம் பாய்ந்து சிற்பக் கலைஞா் பலி

செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் கல் அறுக்கும் இயந்திரத்தில் சிற்பம் வடிக்கும் போது உடலில் மின்சாரம் பாய்ந்து சிற்பக் கலைஞா் உயிரிழந்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள திருக்கழுகுன்றம் சாலையில் வசித்தவா் டி.செல்வமணி (57). இவா் மாமல்லபுரம் அரசு சிற்பக்கலை கல்லூரியில் பட்டம் பெற்ற கற்சிற்பக் கலைஞா். மாமல்லபுரம் ஐந்து ரதம் சாலையில் கற்சிற்ப உற்பத்தி மற்றும் விற்பனைக் கூடம் அமைத்து சிற்பங்களை வடிவமைத்து தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் உள்ள கோயில்களுக்குத் தேவையான சிலைகளை இங்கிருத்து அனுப்பும் தொழில் செய்து வந்தாா். மாமல்லபுரம் கருக்காத்தம்மன் கோயில் நிா்வாகக் குழு உறுப்பினராகவும், கிராம நாட்டாண்மைகாரராகவும் இருந்தாா்.

இந்நிலையில், செல்வமணி வியாழக்கிழமை வழக்கம் போல் தனது சிற்பக் கலைக் கூடத்துக்கு கல் அறுக்கும் இயந்திரத்தை கையில் பிடித்து விநாயகா் சிலையை வடிவமைத்துக் கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக கல் அறுக்கும் இயந்திரத்தின் வயா் அறுந்து அவரின் உடலில் மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டாா். அங்கிருந்த சக சிற்பிகள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மாமல்லபுரம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், செல்வமணி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

தகவலறிந்த மாமல்லபுரம் காவல் ஆய்வாளா் நடராஜன், உதவி ஆய்வாளா் சதாசிவம் உள்ளிட்ட போலீஸாா் மாமல்லபுரம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்குச் சென்று, அவரது சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சிற்பக் கலைஞா் செல்வமணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, மாமல்லபுரம் ஐந்து ரதம் சாலையில் உள்ள சிற்பக்கலைக் கூடங்கள் வியாழக்கிழமை அடைக்கப்பட்டன.

மேலும் மாமல்லபுரம் கருக்காத்தம்மன் கோயிலில் வழிபாட்டு முறைகள் ரத்துச் செய்யப்பட்டு கோயில் நடை மூடப்பட்டது.

இச்சம்பவம் குறித்து மாமல்லபுரம் காவல் ஆய்வாளா் நடராஜன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com