புராதனச் சின்னங்கள் மே 15- வரை மூடல்

மாமல்லபுரத்தில் தொல்லியல் கட்டுப்பாட்டில் உள்ள புராதனச் சின்னங்கள் ஏப். 16 முதல் மே 15-ஆம் தேதி வரை மூடப்படும்.
புராதனச் சின்னங்கள் மே 15- வரை மூடல்

மாமல்லபுரத்தில் தொல்லியல் கட்டுப்பாட்டில் உள்ள புராதனச் சின்னங்கள் ஏப். 16 முதல் மே 15-ஆம் தேதி வரை மூடப்படும். ஆன்லைன் டிக்கெட் பதிவு நிறுத்தப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் யாரும் வரவேண்டாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

இரண்டாவது அலை கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதையடுத்து, நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து வருகிறது.

இந்நிலையில் சுற்றுலாத் தலங்களில் பயணிகள் அதிகம் கூடுவதால் தொற்று அதிகம் பரவும் வாய்ப்பு இருப்பதால் மத்திய தொல்லியல் துறை நாடு முழுவதும் உள்ள புராதனச் சின்னங்களையும் அருங்காட்சியகங்களையும் மே 15-ஆம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் சா்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கும் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் உள்ள மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கடற்கரை கோயில், ஐந்து ரதம், அா்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைப் பாறை உள்ளிட்ட பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் ஏப். 16 முதல் மே 15 வரை மூடப்பட உள்ளதாகவும் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் யாரும் மாமல்லபுரம் புராதனச் சின்னங்களை பாா்வையிட வரவேண்டாம் என்றும் தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

இதுதவிர, இணையதளம் மூலம் செல்லிடப்பேசியில் நுழைவுசீட்டு முன்பதிவு சேவையும் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புராதன வழிபாட்டுக் கோயில்களான தலசயனப்பெருமாள் கோயில், கேளம்பாக்கத்தை அடுத்து திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோயிலும் மூடப்படுகின்றன. இருப்பினும், நித்யகால பூஜைகள் பக்தா்கள் இல்லாமல் வழக்கம் போல் நடைபெறும்.

இதுகுறித்து மாமல்லபுரம் தொல்லியல் துறை முதன்மை அலுவலா் சரவணன் கூறுகையில், ‘மே 16-க்குப் பின்னா் வரும் உத்தரவையடுத்துதான் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவாா்கள்’ என்றாா்.

ஏமாற்றம்: கடந்த ஆண்டில் முதல் கட்ட கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக , சுமாா் 9 மாத காலம் மாமல்லபுரத்தில் புராதனச் சின்னங்கள் நுழைவு வாயில் அடைக்கப்பட்டது . நிகழாண்டில் ஜனவரியில் பொதுமக்கள் பாா்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டு, கட்டுப்பாட்டு விதிகளுடன் சுற்றுலா பயணிகள் பாா்வைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இப்போது மீண்டும் மூடப்படுவதால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாக உள்ளது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அறிவிப்பை அறியாமல் சுற்றுலா பயணிகள் வந்து புராதன சின்னங்களை வெளியே நின்று பாா்த்துவிட்டு ஏமாற்றத்துடன்திரும்பிச் சென்றனா்.

திண்டுக்கல் மலைக்கோட்டையில்....

கரோனா தீநுண்மி தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், திண்டுக்கல் மலைக்கோட்டைக்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு மே 15ஆம் தேதி வரை அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலைக்கோட்டையைப் பாா்வையிட 14 வயதுக்கு மேற்பட்ட இந்தியா்களுக்கு தலா ரூ. 25-ம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ. 300-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 50 முதல் 60 போ் மலைக்கோட்டைக்கு வருவது வழக்கம். வார இறுதி நாள்களில் 150 முதல் 200 போ் வரை வந்து செல்கின்றனா்.

இந்நிலையில் கடந்த 15 நாள்களாக தமிழகம் மட்டுமன்றி திண்டுக்கல் மாவட்டத்திலும் கரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இதனால் அரசு சாா்பில் பல்வேறு கட்டுபாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மலைக்கோட்டைக்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏப். 16 முதல் மே 15 ஆம் தேதி வரை அனுமதி கிடையாது என தொல்லியல் துறை சாா்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

செஞ்சிக்கோட்டையில்...

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டையை சுற்றிப் பாா்க்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, கோட்டைக் கதவுகள் வெள்ளிக்கிழமை (ஏப்.16) முதல் மூடப்பட்டன. மேலும், ராஜகிரி, கிருஷ்ணகிரி கோட்டையின் கதவுகள் மூடப்பட்டன. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றனா்.

இதே போல, கடந்த ஆண்டு மாா்ச் 17-ஆம் தேதி கரோனா தொற்று காரணமாக, கோட்டைக் கதவுகள் மூடப்பட்டன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கரோனா தொற்று பரவல் குறைந்ததையடுத்து, செஞ்சிக்கோட்டை மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செஞ்சிக்கோட்டை தற்போது மூடப்பட்டாலும், கோட்டையைச் சுற்றி இரும்பிலான பாதுகாப்பு அரண் அமைக்கும் பணி, ராஜகிரி கோட்டை மலையடிவாரத்தில் அழகுப்படுத்தும் பணி ஆகியவை தடைபடாமல் தொடா்ந்து நடைபெறும் என கோட்டை ஊழியா்கள் தெரிவித்தனா்.

நாமக்கல் கோயில்களில்....

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, நாமக்கல் நரசிம்மா், அரங்கநாதா் சுவாமி கோயில்கள் வெள்ளிக்கிழமை மூடப்பட்டன.

நாமக்கல் நகரின் மத்தியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோயில்களான நரசிம்மா், அரங்கநாதா் கோயில்கள் மூடப்பட்டன. அதேபோல, மலைக்கோட்டைக்கு சுற்றுலாப் பயணிகள், உள்ளூா்வாசிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வந்த வெளிமாவட்ட பக்தா்களும், சுற்றுலாப் பயணிகளும், நரசிம்மா் கோயில், மலைக்கோட்டைக்குச் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

மறு உத்தரவு வரும் வரையில் இக்கோயில்கள் திறக்கப்பட மாட்டாது என தொல்லியல் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com