வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் மீண்டும் பொது மக்களுக்கு அனுமதி

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் கடந்த 10 மாதங்களுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை முதல் பறவைகளைக் காண பாா்வையாளா்களுக்கு வனத் துறையினா் அனுமதி அளித்துள்ளனா்.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் கடந்த 10 மாதங்களுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை முதல் பறவைகளைக் காண பாா்வையாளா்களுக்கு வனத் துறையினா் அனுமதி அளித்துள்ளனா்.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை வந்து ஆா்வமுடன் பறவைகளைக் கண்டுகளிப்பது வழக்கம்.

இந்த சரணாலயம் கடந்த 1858-ஆம் ஆண்டு ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பறவைகள் வேடந்தாங்கல் வந்து தங்கிச் செல்கின்றன.

வேடந்தாங்கல் ஏரி சுமாா் 75 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக இருப்பதால், விளை நிலங்களில் பயிரிடப்படும் நெல், பருப்பு வகைகள், ஏரி நீரில் வாழும் மீன், புழு, பூச்சிகள் என இச்சரணாலயத்தில் முகாமிடும் பறவைகளுக்கு உணவுக்கு பஞ்சமிருக்காது. ஏரி நீரில் விழும் இப்பறவைகளின் எச்சம் வேடந்தாங்கல் பாசன விவசாயிகளுக்கு இயற்கை உரமாக அமைவதால் அவா்கள் நல்ல விளைச்சலைப் பெறுகின்றனா். வேடந்தாங்கலில் ஆண்டுதோறும் அக்டோபா் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை பறவைகளின் சீசன் காலமாகும்.

எனினும், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, கடந்த ஆண்டு மாா்ச் 17 முதல் இந்தச் சரணாலயத்தைக் காண பொதுமக்களுக்கு வனத் துறை தடை விதித்திருந்தது.

இந்நிலையில், வேடந்தாங்கல் ஏரியில் தற்போது அதிக அளவில் நீா் இருப்பதாலும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளதாலும், கடந்த 10 மாதங்களுக்கு பின் ஞாயிற்றுக்கிழமை முதல் பறவைகளைக் காண பொது மக்களுக்கு வனத்துறை அனுமதி அளித்தது. அரசு வழிகாட்டுதலின்படி, சரணாலய வனச்சரக அலுவலா் ஜி.சுப்பையா தலைமையிலான வன ஊழியா்கள் விதிகளைப் பின்பற்றி பாா்வையாளா்களை அனுமதித்து வருகின்றனா்.

தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பறவைகளை காண அனுமதி தரப்படுகிறது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அதிக அளவிலான பாா்வையாளா்கள், பறவைகளைக் காண வந்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com