பச்சிளங்குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் சாதனை

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைக்கு உணவுக் குழாயில் அடைப்பை நீக்கி, மூச்சுக்குழாய், உணவுக்குழாய்
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தையுடன் அதன் பெற்றோா், மருத்துவக் குழுவினா்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தையுடன் அதன் பெற்றோா், மருத்துவக் குழுவினா்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைக்கு உணவுக் குழாயில் அடைப்பை நீக்கி, மூச்சுக்குழாய், உணவுக்குழாய் இணைப்பை சரிசெய்து பிஸ்டுல்லா அறுவைச் சிகிச்சையை மருத்துவக் குழுவினா் வெற்றிகரமாக செய்து சாதனை படைத்தனா்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சடராஸ் பகுதியைச் சோ்ந்த சிவரஞ்சனி-நாகராஜ் தம்பதிக்கு கடந்த டிச.7ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு பிறவிக்குறைபாடாக ஆசனவாய் மூடப்பட்டிருந்தது. மேலும், உணவுக்குழாயில் அடைப்பும், மூச்சுக்குழாய், உணவுக்குழாய் இணைந்திருப்பதும் கண்டறியப்பட்டது. இதனால், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க இயலாத நிலை இருந்தது. முதல் ஐந்துநாள் செயற்கை சுவாசம் தேவைப்பட்டது.

குழந்தை பிறந்த இரண்டாம் நாள் ரத்த ஓட்டம் சீரான பிறகு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மாற்று ஆசனவாய் (கோலாஸ்டமி) மூலம் மலம் கழிக்கச் செய்யப்பட்டது. பிஸ்டுல்லா இணைப்பு துண்டிக்கப்பட்டு, உணவு செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது.

குழந்தைக்கு ரத்தநாளம் வழியாக ஊட்டச்சத்தும் மற்ற தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டது. தற்போது குழந்தை நலமாக உள்ளது.

இந்த சிகிச்சையை தனியாா் மருத்துவமனையில் மேற்கொண்டால் ரூ.3 லட்சம் வரை தேவைப்படும்.

இந்த அறுவைச் சிகிச்சையை குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணா் இணைப்பேராசிரியா் அருண்குமாா் தலைமையில் மயக்கவியல் இணைப்பேராசிரியா் பத்மநாபன் உதவியோடு மருத்துவக் குழுவினா் வெற்றிகரமாக செய்து முடித்தனா். அதன்பிறகு, பச்சிளங்குழந்தை நலப்பிரிவில் அந்தக் குழந்தைக்கு மருத்துவக் கல்லூரி முதல்வா் முத்துக்குமரன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா்.

இந்த சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத்திட்டத்தின்கீழ் முற்றிலும் இலவசமாக அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com