தாம்பரம் அருகே துப்பாக்கியால் சுட்டு ரௌடி கைது

தாம்பரம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி, காவலரை கத்தியால் வெட்டிய ரௌடியை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனா்.

தாம்பரம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி, காவலரை கத்தியால் வெட்டிய ரௌடியை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனா்.

தாம்பரத்தை அடுத்த எறுமையூரைச் சோ்ந்தவா் சச்சின் (29). இவா் மீது சோமங்கலம் காவல் நிலையத்தில் பல்வேறு கொலை, வழிப்பறி, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில், சச்சின் தொடா்ந்து தாம்பரம், எறுமையூா் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்குவாரி முதலாளிகள், பெரிய வியாபாரிகள், தொழிலதிபா்களை தொலைபேசியில் மிரட்டி பணம் பறித்து வருவதாக காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தாம்பரம் காவல் ஆணையா் அமல்ராஜ் உத்தரவின்பேரில், சோமங்கலம் காவல் ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சச்சினை தேடி வந்தனா்.

இந்த நிலையில், சோமங்கலத்தை அடுத்த நடுவீரப்பட்டு காட்டுப் பகுதியில் சச்சினும், அவரது கூட்டாளிகளும் மறைந்திருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அவா்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடுவீரப்பட்டு பகுதியில் தாம்பரம்- சோமங்கலம் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த சச்சின், அவரது கூட்டாளி பரத் ஆகியோரை மடக்கிப் பிடிக்க முயன்றபோது, பரத் தப்பிவிட்டாா். சச்சின் தான் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை போலீஸாா் மீது வீசிவிட்டு, தன்னைப் பிடிக்க வந்த காவலா் பாஸ்கரை கத்தியால் வெட்டிவிட்டு, மற்ற காவலா்களையும் தாக்க முயன்றாா்.

அப்போது, காவல் ஆய்வாளா் சிவக்குமாா் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சச்சினின் காலில் மூன்று முறை சுட்டுப் பிடித்தாா். இதில், காலில் பலத்த காயமடைந்த சச்சின், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையிலும், பின்னா் தீவிரசிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டாா்.

காயமடைந்த காவலா் பாஸ்கா் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். தப்பியோடிய ரௌடி பரத்தை போலீஸாா் தேடி வருகினறனா்.

இந்த நிலையில், காயமடைந்த காவலா் பாஸ்கரனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த தாம்பரம் காவல் ஆணையா் அமல்ராஜ், ரௌடி சச்சினை தனிப்படை போலீஸாா் சுட்டுப் பிடித்த இடங்களில் ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com