முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை செங்கல்பட்டு
திருப்போரூரில் கொடியேற்றத்துடன் தொடங்கிய கந்தசாமி கோயில் பிரம்மோற்சவம்
By DIN | Published On : 07th February 2022 10:50 AM | Last Updated : 07th February 2022 10:50 AM | அ+அ அ- |

திருப்போரூரில் கொடியேற்றத்துடன் தொடங்கிய கந்தசாமி கோயில் பிரம்மோற்சவம்.
செங்கல்பட்டை அடுத்த திருப்போரூர் கந்தசாமி கோயில் பிரம்மோற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விண்ணிலிருந்து போர் புரிந்த இடமாக திகழும் திருப்போரூர் கந்தசாமி கோவிலில் ஆண்டுதோறும் 12 நாள் பிரம்மோற்சவம் நடைபெறும். கடந்தாண்டு கரோனா தொற்றுக் காரணமாக பிரம்மோற்சவம் விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு வெகு விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. செங்கல்பட்டு மாவட்டம். திருப்போரூர் கந்தசாமி கோயில் ஆழிசூழ் பூவுலகில் தர்மமிகு தொண்டை மண்டலத்தில் பழமையானதும் புராதான பெருமை கொண்டதும் யுத்தபுரி சமரபுரி சமரப்பதி எனும் காரணப்பெயர்களால் போற்றப்படுவதும் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முப் பெருமைகளை கொண்டதுமான திருப்போரூர் திருத்தலத்தில் வள்ளி தெய்வானை உடன் உரையாய் மூலிகைகளாலான செதுக்காத திருமேனியாய் சுயம்பு வடிவில் நின்ற கோலத்தில் நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தரும் வள்ளலாய் திகழும் திருப்போரூர் கந்தசாமி கோவில் பிரமோற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரம்மோற்சவ கொடியேற்ற விழாவையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
இதனை அடுத்து சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான் எழுந்தருளி கொடியேற்ற விழா நடைபெற்றது.
விழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை தரிசனம் செய்தனர். 12 நாள் நடைபெறும் இவ்விழாவில் ஏழாம் நாள் திருத்தேரோட்டம் ரத உற்சவமும் பன்னிரண்டாம் நாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. விழா நாள்களில் அன்றாட பகல் உற்சவம் இரவு உற்சவத்தில் முருகப்பெருமான் வெவ்வேறு வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு உற்சவம் நடைபெறும்.
விழாவிற்கான ஏற்படுகளை திருக்கோயில் செயல் அலுவலர் சக்திவேல் மேலாளர் வெற்றி கோயில் பணியாளர்கள், சிவாச்சாரியார்கள் ஊர் பொதுமக்கள் மற்றும் ஸ்ரீபாதம் தாங்கிகள் செய்து வருகின்றனர்.