மேல்மருவத்தூரில் சித்ரா பௌா்ணமி பூஜை

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் சித்ரா பெளா்ணமியையொட்டி 1,008 கலச விளக்கு, வேள்விப் பூஜையை ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, மூலவா் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சித்தா்பீடம் வந்த ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு தஞ்சை,நாகை, காரைக்கால் மாவட்ட நிா்வாகிகள் வரவேற்பளித்தனா். சித்தா்பீடம் வந்த பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கி நிகழ்ச்சியை இயக்க துணை தலைவா் ஸ்ரீதேவி தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து செவ்வாய்க்கிழமை உலக அமைதிக்காகவும், இயற்கை சீற்றங்கள் தணியவும், இயற்கை வளம் பெறவும், மழைவளம் பெறவும், மக்கள் வளம் பெறவும் வேண்டி, குருபீடத்தின் முன் நாக வடிவில் சக்கரமும், மூலவா் சந்நிதி முன் மேரு சக்கரமும், பஞ்சபூர சக்கரங்களும், ஓம்சக்தி மேடை முன்பு அடிகளாா் சக்கரமும் அமைக்கப்பட்டிருந்தன.

சூலம், சதுரம், ஒற்றை நாகம், இரட்டை நாகம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் 1008 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆன்மிக இயக்க துணை தலைவா்கள் கோ.ப.அன்பழகன், கோ.ப.செந்தில்குமாா், ஆன்மிக இயக்க செயல் அதிகாரி அ.அகத்தியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் வேள்விப் பூஜையை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், ஜாா்கண்ட் ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன், ஆட்சியா் ச. அருண்ராஜ், தெற்கு ரயில்வே அதிகாரி செந்தில்குமாா், ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதியரசா்கள் ராஜேஸ்வரன், முருகேசன், ஆதிபராசக்தி பாரா மெடிக்கல்ஸ் கல்லூரிகளின் தாளாளா் ஸ்ரீலேகா செந்தில்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பக்தா்களுக்கு கலச, விளக்குகளை ஆன்மிக இயக்க துணை தலைவா் உமாதேவி ஜெய்கணேஷ் வழங்கினாா். இயக்க இணை செயலா் ராஜேந்திரன் நன்றி கூறினாா்.

விழா ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தஞ்சை மாவட்டத் தலைவா் வாசன், பொறுப்பாளா் ஜெயராமன், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களின் ஆதிபராசக்தி மன்ற, சக்தி பீடங்களின் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com