மெட்ரோ ரயில் 7 ஹெக்டேர் தனியார் நிலம் தேவை

சென்னை, அக். 4: சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிக்கு ஏழு ஹெக்டேர் தனியார் நிலம் தேவைப்படுகிறது. இதற்காக, இடம்வைத்துள்ள 200 பேருடன் தமிழக அரசு பேச்சு நடத்தியுள்ளது.   மேலும், ரயில் நிறுத்தங்கள் 35 -
மெட்ரோ ரயில் 7 ஹெக்டேர் தனியார் நிலம் தேவை

சென்னை, அக். 4: சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிக்கு ஏழு ஹெக்டேர் தனியார் நிலம் தேவைப்படுகிறது. இதற்காக, இடம்வைத்துள்ள 200 பேருடன் தமிழக அரசு பேச்சு நடத்தியுள்ளது.

  மேலும், ரயில் நிறுத்தங்கள் 35 - லிருந்து 30 ஆகக் குறைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

  சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு வழித் தடங்களில் மொத்தம் 45.1 கி.மீ. தூரத்துக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

  வண்ணாரப்பேட்டை - பிராட்வே - சென்னை சென்ட்ரல் - அரசினர் தோட்டம் - அண்ணாசாலை - சைதாப்பேட்டை - கிண்டி -  விமானநிலையம் வரை (23.1 கி.மீ.) ஒரு தடத்திலும், சென்னை சென்ட்ரல் - வேப்பேரி - கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி -அண்ணாநகர் -கோயம்பேடு -வடபழனி -அசோக் நகர் - பரங்கிமலை (22 கி.மீ.) வரை மற்றொரு தடத்திலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கு ரூ. 14,600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

1,500 டன் எடையில்...

   இப்போது, கோயம்பேடு முதல் அசோக் நகர் வரையிலான 4.5 கி.மீ. தூரத்துக்கு ரயில் திட்டத்தைச் செயல்படுத்தும் பணி கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது.

  இந்தப் பணிக்கு ரூ. 199.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் மண் பரிசோதனை உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் மேம்பாலங்களுக்கு கட்டப்படும் தூண்கள் போல, மெட்ரோ ரயிலுக்கும் தூண்கள் அமைக்கப்பட உள்ளன.

  சென்னை வடபழனி பகுதியில் சாலையின் நடுவே இரும்பினால் தூண்கள் அமைத்து, அதில் பெரிய கற்கள் அடுக்கப்பட்டு பளு தாங்கும் சோதனை செய்யப்பட்டது.

  "சுமார் 1,500 டன் எடைக்கு கற்கள் அடுக்கப்படும். இதன்மூலம், பாரத்தை தரை தாங்குமா? இல்லையா? என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இந்தச் சோதனைக்குப் பிறகு, ரயில் திட்டப் பணிகள் முழு வீச்சில் தொடங்கும்' என்று மெட்ரோ ரயில் திட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நிறுத்தங்கள் குறைய வாய்ப்பு...

   வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலான முதல் கட்டப் பணியை முடிக்க, 2014 - 2015 நிதியாண்டு காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  அந்தப் பகுதியில் மொத்தம் 35 நிறுத்தங்கள் வரை அமைக்க முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், பொறியாளர்களின் தீவிர ஆய்வுக்குப் பிறகு 30 நிறுத்தங்கள் வரை அமைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விமான நிலையப் பகுதியில் மட்டும் மொத்தம் 4 நிறுத்தங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இப்போது, இரண்டாகக் குறைக்க பொறியாளர்கள் பரிந்துரைந்துள்ளனர்.

நில உரிமையாளர்களுடன் பேச்சு

   சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிக்கு ஏழு ஹெக்டேர் அளவுக்கு தனியார் நிலம் தேவைப்படுகிறது. நில எடுப்பு தொடர்பாக, 200 பேருடன் மெட்ரோ ரயில் திட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

  இதுகுறித்து உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ""நிலம் எடுப்பின்போது, அந்த நிலத்துக்கான இப்போதைய சந்தை விலை என்னவோ அது அப்படியே நில உரிமையாளர்களுக்கு அளிக்கப்படும். சந்தை விலையை நிர்ணயித்து அளிக்க, தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை அரசு நியமித்துள்ளது. நில உரிமையாளர்களுடன் நடத்திய ஆலோசனையில் 95 சதவீதம் பேர் தங்களது நிலங்களைத் தர ஒப்புக்கொண்டுள்ளனர். திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு குறித்த காலத்துக்குள் முடிக்கப்படும்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com