சென்னை, அக். 25: சமச்சீர் கல்விக்கான வரைவுப் பொதுப் பாடத் திட்டத்திற்கான கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த இப்பாடங்கள் இப்போது தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அவை இன்னும் ஓரிரு நாளில் பள்ளிக்கல்வி இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
பொதுப் பாடத்திட்டத்தின் கீழ் பாடப் புத்தகம் எழுத ஒவ்வொரு பாடத்திற்கும் 5 முதல் 7 ஆசிரியர்கள் வரை தெரிவு செய்யப்பட உள்ளனர்.
2010-2011 ஆம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்பில் சமச்சீர் கல்வி கொண்டுவரப்படும். அதற்கடுத்த ஆண்டுகளில் மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது.
மாநிலப் பொதுப் பாடத்திட்டம், மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓரியண்டல் ஆகிய நான்கு பாட வாரியங்களை இணைத்து பொதுக் கல்வி வாரியம் ஏற்படுத்தப்படும் என்றும், ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டு வரப்படும் எனவும் அறிவித்தது.
அந்த வகையில் முதல்கட்டமாக தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு வரைவுப் பொதுப் பாடத்திட்டம் எழுதி முடிக்கப்பட்டுள்ளன. இந்த வரைவுப் பொதுப் பாடத்திட்டம் ஜ்ஜ்ஜ்.ல்ஹப்ப்ண்ந்ஹப்ஸ்ண்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழில் வரைவுப் பாடத்திட்டம்...: தமிழ் தவிர மற்ற பாடங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே வெளியிடப்பட்டுள்ளன. மற்ற பாடங்களையும், தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் தரப்பில் கோரிக்கைககள் விடப்பட்டன.
இதைத்தொடர்ந்து அனைத்து பாடங்களையும் தமிழில் மொழியாக்கம் செய்யும் பணி தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. பிழை திருத்தம் செய்யும் பணி முடிவடைந்தவுடன், இன்னும் ஓரிரு நாள்களில் வரைவுப் பொதுப் பாடத்திட்டம் தமிழில் பள்ளிக்கல்வி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
886 ஆசிரியர்கள் விண்ணப்பம்: சமச்சீர் கல்விக்காகப் பொதுப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் பாடப் புத்தகங்கள் எழுத 886 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக தமிழ் பாடத்திற்கு 305 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். மாவட்ட மையங்களில் அக்டோபர் 31-ம் தேதி தேர்வு நடத்தி ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
ஒரு பாடத்திற்கு 7 ஆசிரியர்கள் வரை தெரிவு: ஆசிரியர்களை தெரிவு செய்யும் பணிகள் நவம்பர் முதல் வாரத்தில் முடிவடையும் என்று தெரிகிறது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு பாடத்திற்கும் சுமார் 5 முதல் 7 ஆசிரியர்கள் வரை தெரிவு செய்யப்பட்டு, பாடப்புத்தகம் எழுதும் பணி முடுக்கிவிடப்படும் என்று தெரிகிறது. 2010 ஜனவரி முதல் வாரத்திற்குள் பாடப்புத்தகம் எழுதி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
60-க்கும் அதிகமான ஆலோசனைகள்...: வரைவுப் பொதுப் பாடத்திட்டம் தொடர்பாக கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் இருந்து சுமார் 60-க்கும் அதிகமான ஆலோசனைகள், கருத்துகள் இணையதளத்தில் பெறப்பட்டுள்ளன. இவற்றை ஆராய்ந்து பாடப்புத்தகத்தில் சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
சாலை விதிகள்...: நாட்டில் சாலை விபத்துகளில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். அதை மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், சாலை விதிகளை பள்ளியிலேயே தெரிந்து கொள்ள உதவும் வகையில் பாடப்புத்தகத்தில் "சாலை விதிகள்' குறித்து சேர்க்கப்படுகிறது.
போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள்...: அதேநேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இப்போது அதிகளவில் போதை மற்றும் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதைத் தடுக்கும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் "போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீங்குகள்' குறித்தும் பாடப்புத்தகத்தில் சேர்க்கப்படுகிறது.
மாணவர்கள் சுயமாகச் சிந்திப்பதுடன், சமூக சிந்தனையை வளர்த்துக் கொள்ளும் வகையில் பாடப்புத்தகம் எழுதப்படும்'' என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.