

சென்னை, டிச. 8: சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டில் குற்றவியல் சார்ந்த 3 புதிய இளங்கலை பட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்று அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி. திருவாசகம் தெரிவித்தார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறை, ஆசிய குற்றவியல் நிறுவனம் (ஏ.சி.எஸ்.) ஆகியவற்றின் சார்பில் 2-வது ஆண்டு மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்து, துணைவேந்தர் பேசியதாவது:
நாட்டில் கிரிமினல் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நவீன தொழில்நுட்ப வசதிகளை குற்றவாளிகள் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. எனவே, நீதித்துறை, காவல்துறை உள்ளிட்ட சட்ட அமலாக்கல் பிரிவினருக்கு மட்டுமின்றி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கும் குற்றவியல் சார்ந்த படிப்புகளில் தேர்ச்சி பெறுவது அவசியமாகிறது.
பட்டயக் கணக்காளர் (சி.ஏ.) படிப்பில் ஆண்டுதோறும் இறுதி தேர்வு எழுதுவோரில், 3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர். இதனால், பட்டயக் கணக்காளர்களுக்கு அதிக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்புவதில் தேக்கநிலை உள்ளது.
குற்றவியல் சார்ந்த படிப்புகளில் வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. பொறியியல், மருத்துவப் படிப்புகளைப் போல, குற்றவியல் படிப்புகளையும் தொழிற்படிப்புகளாக அங்கீகரிக்க வேண்டும்.
குற்றவியல் படிப்பு பல்கலைக்கழக அளவில் முதுகலை படிப்பாக இப்போது உள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளிலும் குற்றவியல் சார்ந்த தடய அறிவியல், குற்றவியல் பகுப்பாய்வாளர், தடய அறிவியல் கணக்காளர் ஆகிய இளங்கலை பட்டப் படிப்புககள் வரும் கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்றார் துணைவேந்தர் திருவாசகம்.
மாநிலங்களவை உறுப்பினர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன், ஏசிஎஸ் அமைப்பின் தலைவர் ஜியாங்ஹாங் லியூ, சென்னைப் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறைத் தலைவர் ஆர். திலகராஜ், பேராசிரியர் எம். சீனிவாசன் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.