ஏழு சுவரங்களைக் கொண்ட சம்பூர்ண ராகம். 72 மேளகர்த்தாவில் 8-வது மேளமான இது ஹனுமகோடி என்று அழைக்கப்படுகிறது.
இரண்டாவது சக்கரமான் நேத்ர சக்கரத்தில் இரண்டாவது ராகம். ரிஷபத்திலிருந்து தொடங்கி, ஒவ்வொரு சுவரத்தையும் ஷட்ஜமாக வைத்துப் பாடினால் முறையே கல்யாணி, ஹரிகாம்போஜி, நடபைரவி, சங்கராபரணம், கரஹரப்பிரியா முதலிய ராகங்கள் தோன்றும். தோடியின் வர்ணமெட்டு பண்ணிசையில் மத்தகோகிலம் என்று அழைக்கப்படுகிறது. ஹிந்துஸ்தானியில் இதற்கு சமமான ராகம் சுபபந்துவராளியாகும்.
தோடி சீதாராமய்யா என்பவர் எட்டு நாள்கள் தொடர்ந்து தோடி ராகத்தைப் பாடி "தோடி சீதாராமய்ய' என்ற பெயர் பெற்றார். இந்த ராகத்தில் ஜதீஸ்வரம், வர்ணம், பதவர்ணம், கீர்த்தனை, பதம், ஜாவளி, தில்லானா போன்ற எல்லா இசை வடிவங்களும் உள்ளன. தியாகய்யர் இந்த ராகத்தில் மட்டும் 32 கீர்த்தனைகளை புனைந்துள்ளார். தீட்சிதர், ச்யாமா சாஸ்த்திரி இருவருமே இந்த ராகத்தை கையாண்டுள்ளார்கள். இந்த ராகத்தை கையாளாத வாகேயகாரர்களே இல்லை என்று சொல்லலாம். கருணை மற்றும பக்தி ரசத்திற்கு ஏற்ற ராகம்.