புறக்கணிக்கப்படும் புறநகர் ரயில் நிலையங்கள்!

சென்னை : சென்னை புறநகர் மின் ரயில் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் உள்ளிட்ட  அடிப்படை வசதிகளைக் கூட பயன்படுத்த அவல நிலை தொடர்கிறது. சென்னையில் கடற்கரை மற்றும் சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, அரக்க
புறக்கணிக்கப்படும் புறநகர் ரயில் நிலையங்கள்!
Updated on
2 min read

சென்னை : சென்னை புறநகர் மின் ரயில் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் உள்ளிட்ட  அடிப்படை வசதிகளைக் கூட பயன்படுத்த அவல நிலை தொடர்கிறது.

சென்னையில் கடற்கரை மற்றும் சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், எழும்பூர், தாம்பரம், செங்கற்பட்டு ஆகிய வழித்தடங்களில்  தினமும் 635 சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் சராசரியாக 9.50 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.

இந்த வழித்தடங்களில் 59 ரயில் நிலையங்கள் உள்ளன. இதுதவிர சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே 19 நிலையங்கள் வழியாக இயக்கப்படும் மேம்பால ரயில்களில் தினமும் சராசரியாக 75 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர்.

இந்த ரயில் நிலையங்களைப் பராமரிப்பதில் தேக்க நிலை நிலவுகிறது. பாரம்பரியமும், பழமைச் சிறப்பும் வாய்ந்த கடற்கரை ரயில் நிலையம், சென்ட்ரல் (மூர் மார்க்கெட் வளாகம்), குரோம்பேட்டை,பெருங்களத்தூர் உள்ளிட்ட பல ரயில் நிலையங்கள் போதிய பராமரிப்பின்றி உள்ளன.

புறநகர் ரயில் சேவைக்கான பிரதான முனையமாக விளங்கும் கடற்கரை ரயில் நிலையத்தில் பல்வேறு இடங்களில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. நடை மேம்பாலங்களில் பதிக்கப்பட்ட தட்டோடுகள் பெயர்ந்து,நெரிசலில் பயணிகள் தவறி விழுவது அடிக்கடி தொடர்கிறது.

கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து ரிசர்வ் வங்கியின் பின்புறம் வரை ரயில் பாதையில் கோரைப் புற்களுடன் முட்புதர்களும் மண்டியுள்ளன. கோடை காலத்தில் இந்தப் புதர்களில் சமுக விரோதிகள் தீ வைத்துக் கொளுத்துவதாக பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள நடைமேம்பாலம் இடிந்து விழும் நிலையில் சேதமுற்றுள்ளது.

பூங்கா ரயில் நிலையத்துக்கு செல்லும் வழியில் உள்ள அசைவ உணவகங்களில் இருந்து தினமும் கொட்டப்படும் எச்சில் இலை கழிவுகளைக் கண்டு பயணிகளின் முகம் சுளிக்கின்றனர்.

 நினைவுச் சின்னங்களாக மாறிய குடிநீர் குழாய்கள்:

சென்ட்ரலில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (ஜீரோ) வழங்கும் இடம் இப்போது பராமரிப்பின்றி மூடப்பட்டுள்ளது. புதிதாக திறக்கப்பட குடிநீர் குழாய்களும் அடிக்கடி குடிநீர் விநியோகிக்க மறந்து  விடுகின்றன. பல லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்ட பிரமாண்ட எலக்ட்ரானிக் திரையுடன் கூடிய டிவி பழுதடைந்து, அகற்றப்படாமல் உள்ளது.

நுங்கம்பாக்கம், பெருங்களத்தூர் ஆகிய நிலையங்களில் இப்போது டிக்கெட் கவுன்ட்டர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளன. இதனால், எப்போதும் நெரிசல்.

குரோம்பேட்டை ரயில் நிலையத்தின் ஒருபகுதி குப்பைக் கிடங்காக மாறி வருகிறது. ரயில் நிலையத்தையொட்டி அமைந்துள்ள கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் அனைத்தும்  ரயில் பாதையில் இரவில் கொட்டப்படுகின்றன.

குரோம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களின் அருகே தனியார் வாகன நிறுத்தும் இடங்கள் உள்ளன. ரயில் நிலையத்துக்கு வரும் சாலையைக் கூட ஒற்றையடிப் பாதையாக மாற்றும் வகையில் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.

இதனால், கர்ப்பிணிகள் உள்ளிட்ட பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் ரயில் நிலையத்துக்கு வர மிகவும் அவதிப்படுகின்றனர்.

இருளில் மூழ்கிய ரயில் நிலையம்:

கோடம்பாக்கம் ரயில் நிலையம் பல நாள்களாக இருளில் மூழ்கியுள்ளது. மின் இணைப்புகள் அடிக்கடி பழுதடைவதால், இந்த ரயில் நிலையத்தில் பெரும்பாலான மின் விளக்குகள் எரிவதில்லை.

இதனால், ரயில் நிலைய அலுவலர் உள்ளிட்ட ஊழியர்கள் இரவு நேரத்தில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் பணியாற்றுகின்றனர்.

குரோம்பேட்டை ரயில் நிலையத்தின் ஒருபகுதி குப்பைக் கிடங்காக மாறி வருகிறது. ரயில் நிலையத்தையொட்டி அமைந்துள்ள கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் அனைத்தும் இரவில் ரயில் பாதையில் கொட்டப்படுகிறது.

பிளாட்பாரத்துக்கு வெளியே நிற்கும் ரயில்கள்:

பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் இப்போதுள்ள நடைமேடை (பிளாட்பாரம்) 9 பெட்டிகள் இணைக்கப்பட்ட மின் ரயில்கள் மட்டுமே நிற்க வசதியுள்ளது. இதனால், செங்கற்பட்டு- பீச் மார்க்கத்தில் இயக்கப்படும் 12 பெட்டிகள் கொண்ட ரயில்கள் இந்த நிலையத்தில் நிறுத்தப்பட்டால் 4 பெட்டிகள் ரயில் நிலையத்தின் வெளியே நிற்கும் நிலை உள்ளது.

 இதனால், பயணிகள் பெட்டியில் இருந்து இறங்க வேண்டுமெனில், பல அடி உயரத்துக்கு கீழே குதிக்கும் அவல நிலை இப்போதும் தொடர்கிறது.

இந்த நிலையத்தில் உள்ள (செங்கல்பட்டு வழி) லெவல்கிராசிங் வரை ரயிலின் 12 பெட்டிகள் நிற்பதால், முக்கிய நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ரயில் பயணிகளின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற மட்டுமே பட்ஜெட்டில் ரூ. 115 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, ரயில் பயணிகளின் முகத்தில் புன்னகை மலரும் வகையில், குறைகளைத் தீர்க்குமா தெற்கு ரயில்வே?

மூடிக்கிடக்கும் கழிப்பறைகள்!

சென்னை புறநகர் பகுதிகளில் ஊரப்பாக்கம், பெருங்களத்தூர் உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நவீன கழிப்பறைகள் மூடிக்கிடகின்றன.

இதனால், இக் கழிப்பறைகளை பயன்படுத்த வழியின்றி பயணிகள் மிகுந்த அவதிப்படுகின்றனர்.

சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இக் கழிப்பறைகள் அனைத்தும் கட்டணக் கழிப்பறைகளாக தனியார் ஒப்பந்ததாரர்களின் பராமரிப்பில் விடப்படுகின்றன.

இதற்கான அனுமதியை பெற, ஒப்பந்ததாரர்கள் தெற்கு ரயில்வேயிடம் டேவணி தொகையுடன் ஒப்பந்தப் புள்ளிகளை சமர்ப்பிக்க வேண்டும்.

சென்னை பீச்- தாம்பரம்- செங்கல்பட்டு வழித்தடத்தில் பெருங்களத்தூர், ஊரப்பாக்கம், வண்டலூர் உள்ளிட்ட பல்வேறு நிலையங்களில் கழிப்பறைகளை பராமரிக்க ஒப்பந்ததாரர்கள் யாரும் முன்வரவில்லை என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்தக் கழிப்பறைகள் மூடப்பட்டு, பராமரிப்பு இல்லாமல் புதர்கள் மண்டியுள்ளன.

இந்தக் கழிப்பறைகளின் சாவிகள் நிலைய அலுவலரிடம் உள்ளன. கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டுமெனில், நிலைய அலுவலரை அணுக வேண்டும் என்ற நிலை உள்ளது. அந்தோ பரிதாபம், பயணிகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com