300 புதிய ரக பட்டாசுகள் அறிமுகம்
சென்னை, செப். 29: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு 300 புதிய பட்டாசு ரகங்கள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தொழிலாளர்கள் பற்றாக்குறை, பெட்ரோல்- டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக பட்டாசுகளின் விலை கடந்த ஆண்டை விட இப்போது முதல் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. தீபாவளிக்கு இன்னும் 35 நாட்களே உள்ள நிலையில், பட்டாசுத் தயாரிப்புத் தொழிலின் முக்கிய கேந்திரமாக விளங்கும் சிவகாசியில் இருந்து அதிக அளவு பட்டாசு ரகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழகத்திலேயே சென்னையில் தான் ஆண்டுதோறும் அதிக அளவாக 400 கோடிக்கு மேல் பட்டாசு ரகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுகின்றன. கேரளம், புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம் மேற்கு வங்கத்துக்கும் சென்னையிலிருந்து பட்டாசுகள் அனுப்பப்படுகின்றன. இது குறித்து, சென்னை பட்டாசு வியாபாரிகள் நலச் சங்கத்தின் செயலாளர் கே. அப்பாஸ் மற்றும் ஏ. சையத் சுல்தான் ஆகியோர் புதன்கிழமை கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு வகையான வாண வெடிகள், பூப்பூவாகக் கொட்டும் புஸ்வாணங்கள், சரவெடிகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது.
இப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புத்தம் புதிய வகை வாண வெடிகள் உள்ளிட்ட பட்டாசுகளின் விவரம்: சைனா டார்ச், மணி ஸ்பின்னர்ஸ், ஸ்பேஸ் ஷிப், டயமண்ட் டான்சர் ஆகிய வாண வெடிகள் பலத்த சப்தத்துடன் வெடித்து, விண்ணில் பாய்ந்து இரவில் வர்ண ஜாலங்களை ஏற்படுத்தும். ஜெட் ட்ரையல், பாரா ட்ரூப்பர்ஸ் ஆகிய வாண வெடிகள் பகல் நேரத்திலும் வானில் வெடித்துச் சிதறி, வண்ணக் கலவையைக் கொட்டும்.
இந்த வகையான வாண வெடிகள் 12 முதல் 606 முறை (ஷாட்டுகள்) தொடர்ந்து வெடித்து 30 விநாடிகள் முதல் 20 நிமிஷங்கள் வரை வானத்தில் மாயாஜால வித்தைகளை நிகழ்த்தும். தங்கம், வெள்ளிக் காசுகள், வைரங்களும், நவரத்தினங்களும் அடுத்தடுத்து கொட்டிச் சிதறி நம்மைப் பரவசப்படுத்தும். சிவப்பு, பச்சை, மஞ்சள் என வண்ண ஒளிகளுடன் பூமழை தூவும்.
ஜுவல் பாக்ஸ், ரெயின்போ டார்ச், ட்விஸ்ட் அண்ட் டர்ன், 7 ஏஞ்சல்ஸ், ரூபி டயமண்ட்ஸ், பிளின்கர்ஸ், ஸ்பேஸ் ஃபைட்டர்ஸ், சென்சேஷன் என வாண வெடி ரகங்களின் பட்டியல் இன்னமும் நீள்கிறது.
பெண்கள், குழந்தைகளுக்கு... மத்தாப்பூ, புஸ்வாணம், பேன்சி ரக வெடிகள் இந்த ஆண்டு பெண்களைக் கவரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. லவ் ஃபேன், டவர் போஸ்ட்ஸ், பிளவர் பிளாசம்ஸ், ட்ரை கலர் பவுண்டன் உள்ளிட்ட புஸ்வாண ரகங்கள் 10 பெட்டிகள் 410 முதல் 1,900 வரை விற்கப்படுகின்றன. ஜமீன் சக்கரம், அசோக சக்கரம், டில்வர் ட்விங்க்ளர்ஸ் சாட்டை ரகங்களும், ரோகினி, பாராசூட் ரெயின்போ, லூனார், சில்வர் ஜெட் உள்ளிட்ட ராக்கெட் ரகங்களும் விற்பனைக்கு வந்துள்ளன. 10 பெட்டிகள் கொண்ட ராக்கெட் ரகங்கள் 120 முதல் 1,100 வரை விற்கப்படுகின்றன.
மவுசு குறையாத சர வெடிகள்: எத்தனை வகையான பட்டாசுகள் வந்தாலும் சர வெடிகள், அணுகுண்டுகள், டபுள் அவுட் வெடிகளுக்கு இன்னமும் மவுசு குறையவில்லை. இந்த ஆண்டு 10 ஆயிரம் வாலா சரவெடி விலை 3,900. இதில் 5 ஆயிரம் வாலா சர வெடி விலை 1,950 ஆகும். தண்டர் பாம்ஸ், ஹைட்ரஜன் பாம்ஸ் உள்ளிட்ட வெடிகள் 360 முதல் 610 வரை விற்கப்படுகின்றன. இதுதவிர லட்சுமி, குருவி, கிருஷ்ணா, ஜம்போ மற்றும் எலக்ட்ரிக் வெடி ரகங்களும் ஏராளமாகக் குவிந்துள்ளன.
சீன பட்டாசுகளுக்கு வரவேற்பு இல்லை: சீனாவில் தயாரிக்கப்படும் பட்டாசுகள், துப்பாக்கிகள், வாண வெடிகள் ஆகியவை அதிக ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான வியாபாரிகள் இவற்றை கொள்முதல் செய்வதில்லை. ஆனால், உள்நாட்டுத் தேவைக்கேற்ப ஸ்டாண்டர்ட் உள்ளிட்ட பட்டாசு நிறுவனங்கள் சீன நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கும் பட்டாசுகளுக்கு வியாபாரிகளிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது.
கிஃப்ட் பெட்டிகளுக்கு தேவை அதிகரிப்பு: அரசு அலுவலகங்கள் முதல் சாப்ட்வேர் நிறுவனங்கள் வரை தங்களது பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையுடன் அன்பளிப்பாக வழங்கும் பட்டாசுப் பெட்டிகளுக்கு (கிஃப்ட் பாக்ஸ்)
அதிக தேவை உள்ளது. 125 முதல் 1,900 வரை இந்த கிப்ட் பாக்ஸ் விற்கப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னை காரணமாக கிப்ட் பாக்ஸ் மற்றும் கையால் தயாரிக்கும் சரவெடிகள் உள்ளிட்ட பட்டாசு ரகங்கள் தயாரிப்பதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பட்டாசுகளின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
