கணையாழி இதழ் மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி

சென்னை, ஏப்.14: "கணையாழி' மாத இதழ் புதிய தெம்புடனும், வலிமையுடனும் மீண்டும் வெளிவந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அதன் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன் உள்ளிட்ட
கணையாழி இதழ் மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி
Updated on
2 min read

சென்னை, ஏப்.14: "கணையாழி' மாத இதழ் புதிய தெம்புடனும், வலிமையுடனும் மீண்டும் வெளிவந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அதன் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன் உள்ளிட்டோர் கூறினார்கள்.

கவிதா பதிப்பகத்தின் "கணையாழி' கலை-இலக்கிய மாத இதழின் வெளியீட்டு விழா சென்னை, திநகர் வாணிமஹாலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

எழுத்தாளர் ஜெயகாந்தன் இதழை வெளியிட, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ம. ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார். முதல்வர் கருணாநிதி வாழ்த்துச் செய்தி அனுப்பி

யிருந்தார்.

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி விழாவுக்குத் தலைமையேற்று பேசியது:

கணையாழி இதழ் கஸ்தூரிரங்கனால் 1965-ல் தொடங்கப்பட்டது. அரசியல் முகம் கொண்ட அந்த இதழுக்கு எழுத்தாளர்கள் சுஜாதா, அசோகமித்திரன் போன்றவர்கள் இலக்கிய முகம் கொடுத்தனர். அந்த இதழ் இடையில் சில ஆண்டுகள் வெளிவராமல் இருந்தது. இப்போது அது புதிய தெம்புடனும், வலிமையுடனும் மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இப்போதுள்ள பல வெளியீடுகளில் ஒரு சிறுகதைக்கு மேல் இன்னொரு சிறுகதைக்கு இடமில்லை. தமிழ்ப் பத்திரிகைகளில் குறுநாவல்களைப் பார்க்க முடிவதில்லை. இது போன்ற குறைகளைப் போக்கும் வகையில் கணையாழி இதழ்

இருக்கும் என்றார்.

கணையாழி ஆலோசகர் தமன் பிரகாஷ் முன்னிலை வகித்து பேசியது:

வணிக நோக்கில் ஊடகங்கள் செயல்படும் இந்த காலத்தில் முகம் தெரியாத படைப்பாளிகளை சமுதாயத்துக்கு அடையாளம் காட்டும் விதமாக இந்த இதழ் இருக்கும். படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை தபால் மூலம் அனுப்பினால் போதும். படைப்புகளின் அறிவுத் தன்மை, தரம் ஆகியவற்றைப் பொறுத்து அவை தேர்வு செய்யப்படும். நல்ல, இளம் எழுத்தாளர்களுக்கு இது தளமாக திகழும்

என்றார்.

எழுத்தாளர் ஜெயகாந்தன்:

கணையாழியில் நான் எழுதியது இல்லை. ஆனால், அது என்னைப் பற்றி எழுதியது. அது தொடாத விஷயமே இல்லை என்று சொல்லலாம். கணையாழி மீண்டும் வராதா என்ற எனது ஏக்கத்தை எனது நண்பர்கள் தீர்த்துவிட்டனர். இதுவரை இல்லாத சிறப்பு அதற்கு வரும். இது என்னைக் கூட எழுத வைக்கும்

என்றார்.

ம. ராஜேந்திரன்:

கணையாழி அவ்வப்போது கை மாறியிருந்தாலும் அது பெருந்தன்மை, பண்புள்ளவர்களின் கைகளில் இருந்துள்ளது. கணையாழி அணிகலன் அல்ல. அது அடையாளம். தொலைந்துபோய்விட்ட தமிழர்களை, மரபுகளையும் தொடர்ந்து வரக் கூடிய உறவுகளையும் அடையாளப்படுத்துவது. இடையில் அது போட்ட உறக்கம் என்பது பூமிக்குள் விதை உறங்கியிருத்தலைப் போன்றது. அதிக எண்ணிக்கையில் பத்திரிகைகள் வெளிவரும் இந்தக் காலத்தில் இந்த இதழ்த் தேவையா என்ற கேள்வி எழும். உடம்பை வளர்க்கும் உணவு உணர்வை வளர்க்காது. இந்த இதழ் உணர்வை வளர்க்கும் பணியைச் செய்யும் என்றார்.

நடிகர் நாசர்:

தனிநபருக்கான மன மாற்றத்தைக் கொண்டு வர இது போன்ற இதழ் அவசியம். படிக்கிறவன் என்ற அடையாளத்தைக் கொடுப்பது. இதைப் படிப்பது பெருமைக்குரிய விஷயம் என்றார்.

ஓவியர் ட்ராட்ஸ்கி மருது:

பழைய கணையாழி இதழ், செய்தியைத் தொடர்புபடுத்தும் படங்களோடு சேர்த்து கண்காட்சிக்காக வரையப்படும் தனிப் படங்களையும் சேர்த்து பிரசுரித்து ஓவியர்களையும் வளர்த்தது. அது போல் இப்போது வெளிவரும் இந்த இதழும் எழுத்தாளர்கள், கவிஞர்களைத் தாண்டி ஓவியர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

சென்னை பெட்ரோலிய நிறுவன தலைமைக் கண்காணிப்பு அதிகாரி ரெ. பாலகிருஷ்ணன் பேசியது:

கணையாழியைக் கண்டெடுத்தவர்கள், கைப்பிடித்தவர்கள், அதனால் கண்டுபிடிக்கப்பட்டவர்கள் என 3 வகைகளில் கணையாழியைக் குறிப்பிடலாம். இடையில் அதன் வெளியீடு நின்றபோது எங்களுக்குள் ஒரு குற்றவுணர்வு எழுந்தது. அது இப்போது சரியாகி உள்ளது. அது எழுதுபவர், வாசிப்பவர், நடத்துபவர் என 3 திசைகளில் அல்லாமல் ஒரே திசையில் பயணிக்கும். இது போன்ற இதழுக்கு ஆதரவு தர வேண்டும் என்றார்.

கவிஞர் நா. முத்துக்குமார் பேசுகையில், கணையாழியில் ஏற்கெனவே வெளிவந்த ஒவ்வொன்றையும் மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றும். அந்த இதழில் இப்போது மீண்டும் மழை பொழியத் தொடங்கியிருக்கிறது என்றார்.

கவிஞர் குட்டி ரேவதி பேசுகையில், இலக்கிய உலகில் விடுபட்டுப்போன அனைத்தையும் கணையாழி பிணைக்கும் என நம்புகிறேன் என்றார்.

கணையாழி இதழின் ஆலோசகர் நா. சுவாமிநாதன் வரவேற்றுப் பேசினார். கவிதா பதிப்பகத்தின் சேது சொக்கலிங்கம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com