தமிழ்ச் சிறுகதையின் தந்தை யார்? சாகித்ய அகாதெமி கருத்தரங்கில் விவாதம்

சென்னை, ஏப் 26: 'தமிழ்ச் சிறுகதையின் தந்தை பாரதியாரா? வ.வே.சு. ஐயரா? அல்லது திருமணம் செல்வக் கேசவராய முதலியாரா?' என சாகித்ய அகாதெமி சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் அனல் பறக்க விவாதிக்கப்பட்டது.
தமிழ்ச் சிறுகதையின் தந்தை யார்? சாகித்ய அகாதெமி கருத்தரங்கில் விவாதம்
Updated on
2 min read

சென்னை, ஏப் 26: "தமிழ்ச் சிறுகதையின் தந்தை பாரதியாரா? வ.வே.சு. ஐயரா? அல்லது திருமணம் செல்வக் கேசவராய முதலியாரா?' என சாகித்ய அகாதெமி சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் அனல் பறக்க விவாதிக்கப்பட்டது.

 "தமிழ்ச் சிறுகதைகள் - ஒரு நூற்றாண்டு' என்ற தலைப்பில் சாகித்ய அகாதெமி சார்பில் நடைபெறும் இரு நாள் கருத்தரங்கத்தின் தொடக்கவிழா சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

 இதில் நூற்றாண்டு கால தமிழ்ச் சிறுகதையின் பயணத்தைப் பற்றியும் போக்குகளைப் பற்றியும் ஒருபுறம் விவாதித்த அதேவேளையில், "தமிழ்ச் சிறுகதையின் தந்தை யார்?' என்பது பற்றியும் முக்கியத்துவம் கொடுத்து கருத்தரங்கப் பங்கேற்பாளர்கள் விவாதித்தனர்.

 தலைமையுரை ஆற்றிய சாகித்ய அகாதெமி தமிழ் ஆலோசனை குழு ஒருங்கிணைப்பாளரும், கவிஞருமான சிற்பி பாலசுப்பிரமணியம், காட்சி ஊடகங்களாலும், குறும்படங்களாலும் தமிழ்ச் சிறுகதைகள் சந்திக்கக்கூடிய சவால்களையும், தமிழ்ச் சிறுகதைகள் மீண்டும் யதார்த்த பாதைக்குத் திரும்பி வருவதை பற்றியும் பேசியதுடன், "சிறுகதையின் தந்தை யார்?' என்கிற விவாதத்திற்குள்ளும் நுழைந்து வந்தார்.

 தொடர்ந்து சிற்பி பேசும்போது: ""இந்த விவாதத்தை நடத்த வேண்டும் என்பதில் முனைப்பாய் இருந்தவர் மாலன்தான். இதுபோன்ற விவாதத்தில் ஈடுபட்டு ஒரு படைப்பாளியின் படைப்பைக் குறை கூறும்போது அவர் எழுதிய படைப்பு எந்தக் காலத்தில் எழுதப்பட்டது என்பதையும் அவசியம் கவனித்துப் பார்க்க வேண்டும்.

 புரட்சிகரமான கருத்துகளை அந்தக் காலத்திலேயே சொன்னவர் பாரதி. எப்போதும் பாரதி நவீனத்துவத்துக்கு எதிரானவராக இருக்கவில்லை. லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் எப்படி அவர்களுடைய மாய யதார்த்தவாத புனைவுகளைப் படைத்தார்களோ, அதைப்போல பாரதி நவீனத்துவத்தை உள்வாங்கிக் கொண்டு நம்முடைய பாரம்பரிய எழுத்து முறையையும் விடாமல் பின்பற்றி எழுதினார்'' என்றார் சிற்பி.

 இவரைத் தொடர்ந்து மைய உரையாற்றிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மாலன் "சிறுகதையின் தந்தை' என்று வ.வே.சு ஐயர் தவறாக முன்னிறுத்தப் படுகிறார் என்று பேசினார்.

 ""புகையை நம்பி உணவை வெறுக்கும் மனிதர்களைப் போல என்று பாரதி ஓரிடத்தில் எழுதுகிறார். அதைப்போல சாரத்தை விட்டுவிட்டு வடிவத்தைக் கொண்டு சிறுகதைகளை மதிப்பிடும் விமர்சகர்களின் காரணமாக பாரதி புறக்கணிக்கப்பட்டு வ.வே.சு.ஐயர் நவீனச் சிறுகதைகளின் தந்தையாக வரலாற்றில் முன்னிறுத்தப்படுகிறார்.

 தமிழின் முதல் சிறுகதை? ஆனால் அதிர்ச்சிகரமான ஒரு விஷயம் என்னவென்றால் தமிழின் முதல் நவீன சிறுகதை என வகுப்பறைகளில் போதிக்கப்படும் வ.வே.சு.ஐயரின் குளத்தங்கரை அரசமரம் ஒரு தழுவல் கதை. தாகூர் எழுதிய காட்டேர் கதா என்ற வங்கக் கதையின் தழுவல்.

 இரண்டாவது அதிர்ச்சிகரமான விஷயம், ஐயர் தமிழ்ச் சிறுகதைகளைச் செழுமைப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்திற்காக எழுதவில்லை. பிற்காலத்தில் பெரிய சரித்திரக் கதைகள் எழுதுவதற்காக கை பழகும் நோக்கத்தோடுதான் எழுதினார் என்பதே உண்மை. இதை ஐயர் இறந்து போவதற்குச் சில நாள்களுக்கு முன்பு அவரது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் பதிவு செய்துள்ளார்'' என்று மாலன் பேசினார்.

 இதன் பின்னர் நடைபெற்ற முதல் அமர்வில் எழுத்தாளர் பெ.சு.மணி பேசியது:

 "திருமணம் செல்வக் கேசவராய முதலியார், பாரதியார், வ.வே.சு.ஐயர் ஆகியோரில் யார் சிறுகதையின் தந்தை என்றால் என் ஆய்வேடு பாரதிதான் என்று நிறுவுகின்றது.

 சி.சு.செல்லப்பா 1974- ம் ஆண்டு எழுதிய இலக்கிய விமர்சனம் என்னும் நூலில் வ.வே.சு. ஐயரே சிறுகதைக்குத் தந்தை என்று தேர்வு செய்திருந்தார். பின்னர் 1988-ம் ஆண்டு சி.சு.செல்லப்பா தமது கருத்தை மாற்றிக்கொண்டு பாரதிதான் சிறுகதையின் தந்தை என்றார்.

 இது குறித்து செல்லப்பா கூறும்போது, "தமிழ்ச் சிறுகதைக்கு வ.வே.சு.ஐயர்தான் தந்தை என்ற கருத்தை மணிக்கொடி காலம் முதல் அழுத்திச் சொல்லி வந்திருக்கிறோம். மங்கையர்க்கரசியின் காதல் தொகுப்பை வைத்து குறிப்பாக குளத்தங்கரை அரசமரம் சிறுகதையை வைத்து தற்காலத் தமிழ் இலக்கியத்தின் சகல துறைகளையும் தொட்டு, பாரதி சிறுகதைத் துறைக்கு ஆரம்ப பங்கு செலுத்தியதாகச் சொல்வதற்கில்லை என்ற கருத்து பரவலாக இருக்கிறது.

 ஆனால், உண்மை வேறுவிதம் என்பதை அப்போது உணர இயலாது; நான் உணர்ந்தபோது விமர்சனப் பொறுப்பைச் சரிவர செய்யத் தவறிய குற்றவுணர்வு மனதை உறுத்தியது.

 பாரதியின் ஆறிலொரு பங்கு என்ற கதை 1913-இல் எழுதப்பட்டது. தமிழில் குறிப்பிடத்தக்க முதல் சிறுகதையாக அமைந்திருப்பதுதான் இதன் விசேஷம். இந்தச் சிறுகதையை ஆராய்ந்து மாற்றிக்கொண்டதன் மூலம் என் தவறுக்குப் பிராயச்சித்தம் செய்துவிட்டேன் என்று செல்லப்பா கூறியுள்ளார். எனவே சிறுகதையின் தந்தை பாரதியே' என்றார் பெ.சு.மணி.

 பின்னர் பேராசிரியை இரா. பிரேமா பேசும்போது, "இப்படி விவாதிப்பதே தவறான விஷயம். மூவரும் தங்கள் அளவில் சிறப்பான படைப்புகளைக் கொடுத்து உள்ளனர். இதில் யார் தந்தை? என்றெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. மூவரையும் முன்னோடிகளாகத்தான் கொள்ள வேண்டும் என்று பேசினார்.

 இந்தக் கருத்தரங்கில் சாகித்ய அகாதெமி செயலாளர் அக்ரஹார கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரையாற்றினார். தென்மண்டலச் செயலாளர் அ.சு.இளங்கோவன் நன்றியுரையாற்றினார்.

 கருத்தரங்கில் எழுத்தாளர்கள் சா.கந்தசாமி, நாஞ்சில்நாடன், பாவண்ணன்,இலக்கிய விமர்சகர் வேதசகாயகுமார், பேராசிரியர் அ.இராமசாமி, உள்பட பலர் கலந்துகொண்டு சிறுகதைச் சிற்பிகள் என்ற தலைப்பில் பேசினார்கள்.

 கருத்தரங்கத்துக்கு வந்த பார்வையாளர்கள் மத்தியிலும் "சிறுகதையின் தந்தை யார்?' என்கிற விவாதம் தொடர்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com