சென்னையில் மீண்டும் புத்துயிர் பெறும் பாய்ஸ் கிளப்

சென்னை, ஜூலை 23: சென்னை மாநகரத்தில் சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் மூலம் நடைபெறும் குற்றங்களைத் தடுக்கும் வகையில் சிறுவர் மன்றங்களுக்கு (பாய்ஸ் கிளப்) மாநகர காவல்துறை புத்துயிர் அளித்து வருகிறது.  தமிழத
Updated on
2 min read

சென்னை, ஜூலை 23: சென்னை மாநகரத்தில் சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் மூலம் நடைபெறும் குற்றங்களைத் தடுக்கும் வகையில் சிறுவர் மன்றங்களுக்கு (பாய்ஸ் கிளப்) மாநகர காவல்துறை புத்துயிர் அளித்து வருகிறது.

 தமிழத்தில் சிறுவர் மன்றம் 1960-ம் ஆண்டு முதல் செயல்பட்டாலும், கடந்த 2003-ல் இருந்து தான் சிறப்பாக செயல்படத் தொடங்கியது. அப்போது சென்னை மாநகர் பகுதியில் மட்டும் 81 சிறுவர் மன்றங்கள் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு சிறுவர் மன்றங்களிலும் 70 முதல் 100 பேர் வரை உறுப்பினர்களாக இருந்தனர்.

 குற்றத் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே சிறுவர் மன்றங்கள் காவல்துறையால் தொடங்கப்படுகின்றன. தவறான வழியில் செல்லும் சிறுவர்களை நல்ல வழிக்கு கொண்டு வருதல், சிறுவர்களுக்கு கல்வி, பொது அறிவு உள்ளிட்ட அறிவை வளர்க்கக் கூடிய பயிற்சி அளித்தல் ஆகியவையே இதன் நோக்கம்.

 மேலும் சிறுவர்களுக்கு கல்வி,விளையாட்டுகளில் ஊக்கம் அளிக்கும் வகையில் பல்வேறு போட்டிகளும் நடத்தப்படும்.

 சிறுவர் மன்றங்களை காவல்துறை, அரசின் பிற துறைகளோடும், தொண்டு நிறுவனங்களுடனும் இணைந்து செயல்படுத்தி வருகிறது. வறுமை மற்றும் ஏழ்மை காரணமாக திசைமாறிச் செல்லும் சிறுவர்களை, நல்ல வழிக்கு அழைத்துச் செல்லும் வகையில் குடிசைப் பகுதிகளில் சிறுவர் மன்றங்கள் அதிகமாக தொடங்கப்பட்டன.

 சென்னையில் 900 இடங்களில் குடிசைப் பகுதிகளிலும், 50 மீனவர் குடியிருப்புகளும் இருப்பதாக கூறப்படுகிறது. இப்பகுதிகளிலேயே சிறுவர் மன்றங்கள் செயல்பட்டன. இதன் மூலம் குற்றங்கள் பெருமளவு தடுக்கப்பட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

 ஆனால் அதன் பின்னர் சிறுவர் மன்றம் மாநகர காவல்துறையால் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டது. அண்மை காலமாக மாநகரில் வழிப்பறி,திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்த குற்றங்களில் ஈடுபடுகிறவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் சிறுவர்களும், மாணவர்களும் என காவல்துறையினரால் கருதப்படுகிறது.

 இதனால் காவல்துறையினர் இவர்களை கண்டறிந்து கைது செய்வதில் இடர்பாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக சிறுவர் மன்றத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

 இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் சிறுவர் மன்றங்கள் முழுமையாக செயல்படத் தொடங்கும் என மாநகர காவல் ஆணையர் ஜே.கே.திரிபாதி தெரிவிக்கிறார்.

 சிறுவர் மன்றங்களின் மூலம் மாணவர்களுக்கு டியூஷன், ஆங்கில பேச்சு பயிற்சி ஆகியவை கற்றுத்தர திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் பல்வேறு போட்டிகளை நடத்தும் திட்டம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

 ஏழ்மையில் இருக்கும் சிறுவர்களையும், மாணவர்களையும் நல்ல வழிக்கு கொண்டு செல்வதன் மூலம், சிறுவர்களால் நடைபெறும் குற்றங்களைத் தடுக்க காவல்துறை திட்டமிட்டு வருகிறது. இதனால் சிறுவர்கள் தங்களது கண்காணிப்பில் இருப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களிடமிருந்து தகவல்களை பெற முடியும் எனவும் காவல்துறையினர் கருதுகின்றனர்.

 ஏற்கெனவே உள்ள சிறுவர் மன்றங்களுக்கு மட்டும் இப்போது புத்துயிர் அளிக்கப்படும் நிலையில், புதிதாகவும் சிறுவர் மன்றங்களை தொடங்கும் திட்டமும் காவல்துறையினரிடம் இருப்பதாக கூறப்படுகிறது.

 சிறுவர் மன்றங்களுக்கு பொதுமக்களிடம் வரவேற்பு இருக்கும் நிலையில் குற்றங்கள் குறைந்த பின்னர், சிறுவர் மன்றங்களை மீண்டும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடக் கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com