அடிப்படை வசதியின்றி தடுமாறும் குற்ற நுண்ணறிவுப் பிரிவு

சென்னை,ஜூன் 26: தமிழக காவல் துறையில் புதிதாக தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த குற்றங்கள் நுண்ணறிவுப் பிரிவு (Organised Crime Intelligence Unit (OCIU)) போதிய வசதி இல்லாமல், தடுமாற்றத்துடன் செயல்படுகிறது. மும்
Updated on
2 min read

சென்னை,ஜூன் 26: தமிழக காவல் துறையில் புதிதாக தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த குற்றங்கள் நுண்ணறிவுப் பிரிவு (Organised Crime Intelligence Unit (OCIU)) போதிய வசதி இல்லாமல், தடுமாற்றத்துடன் செயல்படுகிறது.

மும்பையில் 2008 ல் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு மத்திய,மாநில போலீஸாரிடம் தகவல் பரிமாற்றத்தில் இருந்த இடர்ப்பாடே காரணமாக கூறப்பட்டது. இதன் விளைவாக மத்திய,மாநில உளவுத்துறை போலீஸார் திரட்டும் தகவல்களை உடனுக்குடன் அனைவரும் பரிமாறிக்கொள்ளும் வகையிலும், தகவல் தொடர்பில் காலதாமதமோ, இடர்ப்பாடோ இருக்கக் கூடாது என தமிழக காவல்துறை கடந்த ஆண்டு ஒருங்கிணைந்த குற்றங்கள் நுண்ணறிவுப் பிரிவை தொடங்கியது.

இந்தப் பிரிவு போலீஸாருக்கு உள்ளூர் ரௌடிக் கும்பல், போதைப் பொருள் கடத்தும் நபர்கள், மோசடி நபர்கள் ஆகியோரை பற்றிய தகவல்களை சேகரிப்பது, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் நிர்வாகிகளைக் கண்காணிப்பது, பிரிவினைவாத மற்றும் தீவிரவாத இயக்கங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பது ஆகியவை முதல் பணியாகும். சேகரித்த தகவல்களை மத்திய உளவுத்துறை (ஐ.பி.), சி.பி.ஐ., ரா உள்ளிட்ட மத்தியப்பிரிவு போலீஸாருக்கு அனுப்புவது அடுத்த முக்கியப் பணியாகும்.

அதேவேளையில் சட்டம், ஒழுங்கு பிரச்னைகளை முன்னரே கண்டறிந்தும், மத்திய உளவுத்துறை போலீஸார் அனுப்பும் தகவலின்படியும் உள்ளூர் போலீஸாரை உஷார்படுத்துவதும் ஒருங்கிணைந்த குற்றங்களின் நுண்ணறிவு பிரிவின் முக்கிய வேலையாகும்.

மாநில எஸ்.பி.சி.ஐ.டி. கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தப் பிரிவு தொடங்கப்பட்டு ஒர் ஆண்டு ஆகியும், இன்னும் முழுமையாக செயல்பட முடியாத நிலையில் உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், சேலம், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் இந்தப் பிரிவு தொடங்கப்பட்டது.

தொடக்கத்தில் எஸ்.பி.சி.ஐ.டி. அலுவலகங்களில் செயல்பட்ட இந்தப் பிரிவு, சில மாதங்களில் தனியாக அலுவலகங்களில் செயல்படத் தொடங்கியது. தொடக்க காலத்தில் இந்தப் பிரிவுக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதில் அரசு ஆர்வம் காட்டியது. இப் பிரிவுக்கு மட்டும் 460 போலீஸார் நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரிவில் லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் ஆகிய புகார்கள் இல்லாத இன்ஸ்பெக்டர்களும், சப்-இன்ஸ்பெக்டர்களும் நியமிக்கப்பட்டனர்.

ஆனால் இப்போது இந்தப் பிரிவுக்கு தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதில் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப் - இன்ஸ்பெக்டர்களும், 8 காவலர்களில் இருந்து 12 காவலர்களும் நியமிக்கப்படுவார்கள் என கூறப்பட்டிருந்தது. இதில் அனைத்து காவல் நிலையங்களுக்கும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், காவலர்கள் மிகக் குறைவான அளவிலேயே நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளையில் இப் பிரிவின் எஸ்.பி. பதவியும் காலியாக இருப்பதாலே, பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக உளவுத் தகவல்களை சேகரிப்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அப் பிரிவு அதிகாரிகள் கூறுகின்றனர். இதேபோல பல அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாமலே உள்ளன.

குறிப்பாக இன்னும் எந்த காவல் நிலையத்துக்கும் கம்ப்யூட்டர், பேக்ஸ் மிஷின், ஸ்கனர் உள்ளிட்ட கருவிகள் வழங்கப்படாமலேயே உள்ளது. இதன் விளைவாகக் கிடைக்கும் தகவல்களை விரைந்து அனுப்புவதிலும் இடர்ப்பாடு ஏற்பட்டுள்ளது.

இக் காரணங்களால் தகவல்களை விரைந்து அனுப்புவதற்கும், தகவல்களை ஒருங்கிணைப்பதற்கும் தொடங்கப்பட்ட இந்தப் பிரிவு, தொடங்கப்பட்டதின் நோக்கத்தைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது.

இப் பிரச்னைகளால் தொடக்கத்தில் இந்தப் பிரிவில் பணிபுரிவதற்கு ஆர்வம் காட்டிய போலீஸார்,இப்போது இப் பிரிவில் பணிபுரிவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை.

இனிமேலும் இந்தப் பிரிவுக்கு தேவையான அடிப்படை வசதிகளைச் செய்யாமலும்,போதுமான காவலர்களை நியமிக்காமலும் இருந்தால் ஒருங்கிணைந்த குற்றங்கள் நுண்ணறிவு முழுமையாக செயல்படாமல் போகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இனிமேலாவது இவ் விஷயத்தில் அரசும், காவல்துறை உயர் அதிகாரிகளும் ஒருங்கிணைந்த குற்றங்கள் நுண்ணறிவுப் பிரிவு முழுமையாக செயல்படுவதற்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com