இருட்டில் அரிய நூலகம்!

சென்னை, மே 22: ஒரு மேஜையின் மேல் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம் இருக்கிறது. அந்தப் புத்தகத்தின் அட்டை, வான்கோவின் "விண்மீன்கள் சூழ்ந்த இரவு' என்கிற ஓவியத்தால் வடிவமைக்கப்பட்டு புத்தம் புதிதாகக
இருட்டில் அரிய நூலகம்!
Updated on
3 min read

சென்னை, மே 22: ஒரு மேஜையின் மேல் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம் இருக்கிறது. அந்தப் புத்தகத்தின் அட்டை, வான்கோவின் "விண்மீன்கள் சூழ்ந்த இரவு' என்கிற ஓவியத்தால் வடிவமைக்கப்பட்டு புத்தம் புதிதாகக் காட்சியளிக்கிறது. அதன் அழகில் ஈர்க்கப்பட்டு ஆவலோடு அந்தப் புத்தகத்தைப் புரட்டுகிறீர்கள். ஆனால் வெளித்தோற்றுத்துக்கு மாறாக உள் பக்கங்கள் முழுவதும் கரையான்களால் அரிக்கப்பட்டிருக்கின்றன.

 இந்தக் காட்சியை நேரடியாகச் சந்திக்கும்போது உங்களின் நெஞ்சம் எப்படிப் பதறிப்போகுமோ அப்படித்தான் இருக்கிறது சென்னை கல்லூரி சாலையில் உள்ள பள்ளி கல்வி இயக்குனரக வளாகத்தில் "சென்னை இலக்கியச் சங்கம்' சார்பில் நடத்தப்படும் வாடகை நூலகக் கட்டடத்துக்குள் சென்று வருகிற போதும்.

 இந்தோ - பிரேசியன் கட்டடக் கலையின் சான்றாக இருக்கும் அந்தக் கட்டடம் மத்திய அரசின் புராதன கட்டட பராமரிப்பு நிதியின் கீழ் அண்மையில்தான் புதுப்பிக்கப்பட்டு சிறப்பாகக் காட்சியளிக்கிறது. 40 லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

 ஆனால், இதில் கட்டட மின் இணைப்பு (ஒயரிங்) செலவுகளை மத்திய அரசு கணக்கில் எடுத்துக்கொள்ளாததால் இருட்டிலேயே அந்த நூலகம் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நூலகத்தாரே அமைத்துக் கொண்டுள்ள ஒரு குண்டு விளக்கையும் ஒரு மின் விசிறியையும் வைத்துக்கொண்டு சமாளித்து வருகிறார்கள்

 மின் இணைப்பு வசதியைப் பெறுவதற்காக நூலகத்தார் கடந்த திமுக அரசாங்கத்திடம் உதவிக் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்கள். பொதுப் பணித்துறையிடம் கேட்டால் மின் துறையிடம் கேளுங்கள் என்றும் அங்கு கேட்டால், இங்கு கேளுங்கள் என்பதாகவுமே பதில் கிடைத்து முயற்சியைக் கைவிட்டிருக்கிறார்கள். இந்த நிலையோடு ஆயிரக்கணக்கான பழமையான அரிய புத்தகங்கள் கிழிந்தும், செல்லரித்தும், மக்கி பொலபொலத்துக் கொட்டும் நிலையிலும் இருக்கின்றன என்பதுதான் மிகப் பெரிய வேதனை.

 வரலாறு: இந்தியாவிலேயே மிகவும் பழமையான இந்த வாடகை நூலகம் 1812 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. ராயல் ஏசியாட்டிக் சொசைட்டி என்கிற ஆங்கிலேயர் காலத்து அமைப்பால் உருவாக்கப்பட்டது. முதலில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும், பின்னர் கன்னிமாரா நூலகத்திலும் 1906 - ஆம் ஆண்டு முதல் பள்ளி இயக்குநரக வளாகத்திலும் செயல்பட்டு வருகிறது. இதன் நோக்கம் ஆரம்பத்தில் ஆங்கிலேயர் காலத்தில் குடிமைப் பணி போன்று அரசுப் பணிகளில் பணியாற்றுகிறவர்களும், பணியாற்ற பயிற்சி பெறுபவர்களும் பயன் பெறும் வகையில் நூலகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பின்னர் படிப்படியாக எல்லோரும் பயன்பெறும் வகையில் எல்லாத் துறை நூல்களும் இடம்பிடித்துள்ளன. இதைப்போல ஆரம்பத்தில் ஆங்கிலேயர்களே அதிக அளவில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு உள்ளனர். பின்னர் இதிலும் மாற்றம் ஏற்பட்டு இந்தியர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. விடுதலைக்குப் பிறகு முழுமையாக இந்தியர்களே உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். அன்னிபெசன்ட் அம்மையார், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் ராதாகிருஷ்ணன், திருவாங்கூர் மகாராஜா, வரதராஜ முதலியார், எஸ்.சீனிவாச அய்யங்கார், எஸ்.சத்தியமூர்த்தி, டி.டி.கே. கிருஷ்ணமாச்சாரி உள்பட ஏராளமானோர் உறுப்பினர்களாக இருந்துள்ளார்கள். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்த நூலகத்தில் உறுப்பினராக விருப்பம் தெரிவித்து அவர் தன் கைப்பட எழுதிய கடிதம் இப்போதும் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

 புத்தக அலமாரிகள்: நூலகத்துக்குள் நுழையும்போது எல்லோருமே மிரண்டு போகுமளவு புத்தகங்கள் அடுக்கப்பட்ட மிக உயரமான ஸ்டீல் ரேக்குகள் வரவேற்கும். ஒவ்வொரு ரேக்கும் ஒரு மின் மரம் உயரமிருக்கும். சுமார் 20 அடி. ஏறிப்போய் புத்தகங்கள் எடுத்து வருவதற்கு ஸ்டீலிலேயே ஏணிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஏணிகள் கொண்டு ஏறிப் போய் வந்தாலும் தலைசுற்றி பயம் பற்றிக் கொள்ளும். இவ்வளவு உயர ரேக்குகள் எதற்கு வைக்க வேண்டும்? "கற்க வேண்டியவை வானளவு' என்பதை உணர்த்தும் வகையில்தான் ஆங்கிலேயர்கள் அமைத்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த ரேக்குகள் மேல் கொண்ட பரவசத்தால் பல சினிமாப் படங்கள் இங்கு படம்பிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக "சந்திரமுகி' படம். ஜோதிகா உடலிலிருந்து சந்திரமுகியை விரட்டுவதற்காக பல நூறு புத்தகங்களைப் படித்ததாக ரஜினி காந்த் சொல்லும் கட்டம் இங்குதான் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ரஜினி ரேக்குகள் மேல் ஏறி நின்று நடிக்கவில்லை அவருக்குப் பதில் வேறொருவர்தான் ஏறி நின்று நடித்துக் கொடுத்துள்ளார் என்பது டூப் கதையில்லை; நிஜக் கதை.

 நூல்கள்: பல உயிர்களின் வெளிப்பாடே நூல்கள் எனக் கொண்டால் இந்த நூலகத்தைப் பொருத்தவரை அழிகிற உயிரினங்களின் வரிசையில்தான் பல இருக்கின்றன. 1960-ஆம் ஆண்டு வரை ஒன்றரை லட்சம் நூல்கள் இருந்திருக்கின்றன. 2000-த்தில் 80 ஆயிரம் என்றாகி, 2010-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி 55 ஆயிரம் நூல்களே மீதமிருக்கின்றன. இதிலும் பல சிதைந்தே காணப்படுகின்றன. ஆங்கிலம், கிரேக்கம், சம்ஸ்கிருதம், அராபி உள்பட வேறு சில மொழி நூல்களும் இருக்கின்றன.

 தமிழ் நூல்கள் தேடிப் பிடித்து எண்ணக்கூடிய வகையில் மிகமிகக் குறைவாகவே இருக்கின்றன. 200 ஆண்டுகளுக்கு முன்பு பதிப்பிக்கப்பட்ட கம்பராமாயணம் நூல் ஒன்று இருப்பதைச் சிறப்பாகச் சொல்லலாம். இங்குள்ள நூல்களிலேயே மிகவும் பழமையானது 1509-ஆம் ஆண்டு கிரேக்கம் மற்றும் லத்தீன் மொழிகளில் உள்ள "அரிஸ்டோடெலிஸ் ஆப்ரேட்னியா' (அழ்ண்ள்ற்ர்ற்ங்ப்ண்ள் ர்ல்ங்ழ்ஹற்ம்ய்ண்ஹ) என்கிற நூல். டாவின்ஸி போன்ற மேற்கத்திய கலைஞர்களின் படைப்புகள் குறித்த ஆராய்ச்சி கட்டுரைகள் கொண்ட நூல்.

 இந்த நூல் கன்னிமாரா நூலகத்திலும் ஒன்று உள்ளது. இதைப்போல 1680-ஆம் ஆண்டு ஜான் பாப்லிஸ்ட் என்பவர் எழுதிய "இந்திய பயணம் மற்றும் தூரக் கிழக்கு நாட்டினரின் உபசரிப்பும்' என்கிற நூலும் பழமையானது.

 வரைபடம் மற்றும் புகைப்படம்: கங்கை ஆற்றின் வரைபடம் ஒன்று உள்ளது. கங்கையின் நீளத்தைப் போலவே மிகப் பெரிய வரைபடம். பிரிக்கப்பிரிக்க நீண்டுகொண்டே செல்லும். இதில் பெரும்பாலான எழுத்துகள் இப்போது அழிந்துபோய் காணப்படுகின்றன. இதுபோல பல வரைபடங்கள் உள்ளதுடன் தமிழ்நாட்டின் கோட்டைகள், கோயில்களின் பழைய புகைப்படங்களும் நிறைய உள்ளன. தஞ்சை பெரியகோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவை அரசு நடத்தியபோது இந்த நூலகத்தாரிடமிருந்துதான் புகைப்படங்களை வாங்கி காட்சிக்கு வைத்து உள்ளனர்.

 உறுப்பினர் எண்ணிக்கை: நூலகத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை இப்போது வெறும் 150 மட்டுமே. எல்லோருமே ஓய்வுபெற்ற அதிகாரிகள். நூலகத்தில் உறுப்பினராகக் கட்டணம் ரூ.550. வீட்டுக்கு வந்து அளிக்க வேண்டுமானால் கட்டணம் ரூ 845. சென்னை நூலகச் சங்கத்தை நிர்வகிக்கும் உறுப்பினராக வேண்டுமானால் கட்டணம் ரூ.1,500. இந்த உறுப்பினர்களே தங்களுக்குள் நிர்வாகிகளைத் தேர்வு செய்துகொண்டு நூலகத்தை நடத்தி வருகிறார்கள். இப்போது பொதுச்செயலாளராக மோகன்ராம் என்பவர் உள்ளார். நூலகராக உமாமகேஸ்வரி என்பவர் உள்ளார். மிகக் குறைந்த பட்சம் 250 உறுப்பினர்களையாவது சேர்க்க வேண்டும் என்பதற்காக நிர்வாகிகள் போராடி வருகிறார்கள். 250 உறுப்பினர்கள் இருந்தால் தமிழக அரசின் நூலகத் துறை சார்பில் தமிழ் நூல்கள் வழங்கப்படுமாம்.

 மின் விளக்கற்ற இருட்டு மட்டுமல்லாமல் எல்லாவகையான இருட்டுகளாலும் சூழப்பட்டுள்ள அந்த ஆவண நூலகத்தை மீட்டெடுக்க தமிழக அரசு மட்டும் முன்வந்தால் போதாது. பலரும் நூலக உறுப்பினர்களாக முன் வரவேண்டும். ஒருவேளை உறுப்பினராக விருப்பமில்லாவிட்டாலும் பரவாயில்லை. அந்த முதிர்ந்த நூலகத்தை, "ஒரு தடவை எட்டிப் பார்த்துவிட்டாவது வாருங்கள்'. உங்கள் மனம் ஒரு நூலகமாக மாறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com